No menu items!

கர்நாடகா முடிவுகள் – 2024-ல் ஆட்சியை மாற்றுமா?

கர்நாடகா முடிவுகள் – 2024-ல் ஆட்சியை மாற்றுமா?

அசைக்க முடியாத கட்சி என்ற பிம்பத்துடன் இருந்த பாரதிய ஜனதா கட்சியை அசைத்து விட்டது, அடித்து விட்டது கர்நாடக தேர்தல் முடிவுகள்.

வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, பாஜகவின் அனைத்துவித எதிர்ப்பாளர்களுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று பட்டியலிடுகிறார்கள்.

இப்போது இந்தியாவில் பாஜக 14 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. அருணாச்சல பிரதேசம், குஜராத், கோவா, அசாம், மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலாயா, நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்தோ கூட்டணியிலோ ஆட்சியில் இருக்கிறது. அதாவது இந்தியாவின் 28 மாநிலங்களில் பாதி மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு 2018-ல் இந்தியாவில் 21 மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சி செய்துக் கொண்டிருந்தது.

ராஜஸ்தான், சத்திஸ்கர், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களில் இப்போது காங்கிரஸ் ஆட்சி. மற்ற 10 மாநிலங்களில் எதிர்க் கட்சிகளின் ஆட்சி. இதுதான் இந்தியாவின் தற்போதைய ஆட்சி நிலவரம்.

ஆனால் இந்த நிலை, 2024 தேர்தலுக்கு முன்பு மாறலாம். ஏனென்றால் இந்த வருடமே இன்னும் ஐந்து மாநிலங்களில் பொதுத் தேர்தல் வர உள்ளன.

சத்திஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் தெலங்கானா, ராஜஸ்தான் அரசுகளின் பதவிக் காலம் ஜனவரி 2024-ல்தான் முடிகிறது. இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இந்திய மாநிலங்களின் ஆட்சி காட்சியை மாற்றும்.

பாஜக ஆளும் மாநிலங்கள் குறைகின்றன என்ற எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை பாஜக மறுக்கிறது.

ஒரு தேர்தலில் தோற்றுவிட்டோம் உண்மைதான். ஆனால் எங்கள் வாக்கு சதவீதம் குறையவில்லை. 2018ல் கர்நாடகத்தில் எங்கள் வாக்கு சதவீதம் 36.22 ஆக இருந்தது, இப்போது 2023-ல் 36 சதவீதமாக இருக்கிறது என்று பாஜகவினர் வாதாடுகிறார்கள். காங்கிரசுக்கு சென்ற வாக்குகள் மதசார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

உண்மைதான் பாஜகவின் வாக்குசதவீதம் மிக மெலிதாய்தான் குறைந்திருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதை வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பாஜகவின் செல்வாக்கு குறையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?

இல்லை என்கின்றன உள்நோக்கிய புள்ளிவிவரங்கள்.

கர்நாடக மாநிலத்தில் 6 மண்டலங்களில் 4 மண்டலங்களில் பாஜகவின் வாக்குகள் மிகவும் குறைந்திருக்கின்றன. ஆனால் மற்ற மண்டலங்களில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதால் ஓட்டு மொத்த வாக்கு சதவீதம் மாறாமல் இருக்கிறது.

பெங்களூரு மண்டலத்தில் 5.3 சதவீதமும் பழைய மைசூர் மண்டலத்தில் 2.8 சதவீதமும் பாஜகவின் வாக்குகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் மத்திய கர்நாடகா, மகாராஷ்டிர கர்நாடகா, கடலோர கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா ஆகிய நான்கு மண்டலங்களில் சராசரியாக 3.5 சதவீத வாக்குகள் குறைந்திருக்கின்றன. மற்ற இரண்டு மண்டலங்கள் கைகொடுத்ததால் அதன் வாக்கு சதவீதம் அதிகம் மாறவில்லை. அதாவது கர்நாடகாவில் 4 மண்டலங்களில் பாஜகவின் பலம் அதிகமாய் குறைந்திருக்கிறது. பாஜகவின் ஆதரவு இரண்டு மண்டலங்களுக்குள் சுருங்கியிருக்கிறது.

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது பாஜகவின் ஈர்ப்பு சக்தி குறைந்துக் கொண்டே வருவதைப் பார்க்க முடிகிறது. இது எதிர்க் கட்சிகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை 21 மாநில ஆட்சிகளுடன் பாஜக சந்தித்தது. ஆனால், 2024 தேர்தலை அத்தனை பலத்துடன் சந்திக்க இயலாது.

2013ல் கர்நாடகா பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. ஆனால் மறுவருடம் – 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக வென்று மோடி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். கர்நாடகத்தின் 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் 17 தொகுதிகளை பாஜக வென்றது. இந்த அரசியல் வரலாற்றையும் மறந்துவிடக் கூடாது.

ஆனால் அன்றைய அரசியல் சூழல் வேறு, இன்று வேறு.

அன்று பாஜக அண்ணாந்துப் பார்க்கும் உயரத்தில் இருந்தது. இன்று எட்டித் தொடும் உயரத்துக்கு குறைந்திருக்கிறது.

அன்று, காங்கிரஸ் பேச்சு மூச்சற்று கிடந்தது. இன்று ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்குப் பிறகு மூச்சுவிடத் தொடங்கியிருக்கிறது.

அன்று, எதிர்க் கட்சிகள் பிரிந்து விலகியிருந்தன. இன்று ஒரே அணியாக போட்டியிடலாமா என்று யோசிக்கத் தொடங்கியுள்ளன.

அன்று, மோடி மேஜிக் செய்வார் என்று மக்கள் நம்பினார்கள். இன்று அந்த நம்பிக்கை சந்தேகத்துக்குரியதாகிவிட்டது

அன்று, பாஜக வெல்ல முடியாத கட்சி என்ற பிம்பம் இருந்தது. இன்று, பாஜகவும் வெல்ல முடிந்த கட்சிதான் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

மிக முக்கியமாக,

அன்று பாஜவின் மீது மக்களுக்கு அதீத ஆர்வம் இருந்தது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு அலுப்பு வந்திருக்கிறது.

இப்போது பந்து எதிர்க் கட்சிகளிடம்… கோட்டை விடுவார்களா? கோட்டையைப் பிடிப்பார்களா?

1 COMMENT

  1. மத்தியில் மீண்டும் பிஜேபி 2024 வெற்றி பெற்றால் இந்தியாவை இழக்க நேரிடும், எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் பிஜேபி வெற்றி பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...