ரஜினிகாந்த் அரசியலில் பல நண்பர்களை பெற்றிருந்தாலும் அவர்கள் அந்த நட்பு அரசியலை தாண்டிய நட்பாக இருக்கும். இதே போல அவரது மகள் ஐஸ்வர்யா அரசியல்வாதியான கனிமொழியுடன் நீண்டநாட்களாக நட்பு வைத்திருக்கிறார். இது சமீபத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் யூடியூப் சேனல் ஒன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழி உடனான தனது நட்பு பற்றி முதன்முறையாக பேசி இருந்தார்.
“பொதுவாக நான் எங்குமே செல்லமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு. எங்களுடையது விவரிக்க முடியாத ஒரு உறவு. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் முதலில் போன் பண்ணி பேசுவது அக்காவிடம் தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து நிறைய திட்டி இருக்கிறேன்.
இன்னும் நல்லா பேசனும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். எனக்கு நட்பு வட்டாரம் ரொம்ப கம்மி. அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வாட்டாரத்தில் ஒருவர் தான் கனிமொழி அக்கா. அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னுடைய கோவில் வழிகாட்டி அவங்க தான். நான் எந்த ஊருக்கு, எந்த கோவிலுக்கு போனாலும் அக்காவின் ஆளுங்க தான் என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க.
அக்கா என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை. ஆனால் அவங்களுக்கு கமர்ஷியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். பார்க்க தான் அவங்க சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவங்க சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும். எப்பவுமே சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.