மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாம் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம், நம் அரசியல் அமைப்பு சட்டம். அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் பாதுகாக்கப்படும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்து இருக்கிறேன்.
தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு. அதனால் தான் நான் அரசியலுக்கே வந்தேன்.
எதிர்த்து குரல் கொடுப்பவர்களை இல்லாமல் செய்வது ஒருவித அரசியல். எதிர்த்து குரல் கொடுத்தாலும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பது நமது அரசியல். அண்ணன், தம்பிகளை மோதவிட்டு பார்ப்பது ஒரு அரசியல் தந்திரம். அது இன்று நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
வயநாட்டில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது சகோதரி பிரியங்கா காந்தி அப்போது உடன் இருந்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையுடன், வயநாடு தொகுதியில் தனது பரப்புரையை தொடங்கினார். திறந்தவெளி வாகனத்தில் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று ராகுல் தனதுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என்றார்.
பாஜக கூட்டணி பற்றி வயிற்றெரிச்சலில் பேசுகிறார்கள் – அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரியில் செய்தியாளர்களை சந்த்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜக கூட்டணியில் பாமக சேருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பல தேர்தல்களில் பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. பாஜக – பாமக கூட்டணி குறித்து சிலர் இப்போது பேசுவது வயிற்றெரிச்சல்.
சமூக நீதிக்காக மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் என்ன செய்தார்கள். பாமக இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தொடர வாய்ப்பு இல்லை. கூட்டணி என சொன்னதால்தான் 10.5% ஒதுக்கீடுக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்பு கொண்டார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி எத்தனை முறை சந்தித்தார் ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார் மு.க.ஸ்டாலின். அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதைபோல் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறினார்.
பாஜக தொண்டர்கள் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மாலை 4 மணிக்கு வர வேண்டிய தமிழிசை, 6:25 மணி ஆகியும் வராததால், பாஜக தொண்டர்களும் கூட்டணி கட்சியினர்களும் சாலையை ஒட்டி இரு புறமும் நின்று கொண்டிருந்தனர். அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது ஓபிஎஸ் அணியினர் பாஜகவினரிடம் சற்று ஓரமாக நிற்கச் சொல்லி இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த அவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களை திட்டி பேசியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழிசை வந்த பிறகு, அவருடன் பிரச்சார வாகனத்தில் ஏற முயற்சி செய்த ஓபிஎஸ் அணியினரை பாஜகவினர் வாகனத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் பாதி பிரச்சாரத்திலேயே திரும்பிச் சென்றனர்.