இன்றைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் 24 7 பிஸியாக இருக்கிறார் கமல் ஹாஸன். அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்திருக்கிறார். இதனால் கமல் ஹாஸனின் கால்ஷீட் டைரி ஏறத்தாழ ஐந்து வருடங்களுக்குப் பிறகு நிரம்பி இருக்கிறது.
‘இந்தியன் 2’ ஷூட்டிங்கை முடித்தவர் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ பட முதல் பார்வை போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்தார். இடையில் ஹெச். வினோத் பட வேலைகளில், கதை விவாதங்களில் அவ்வப்போது கூட இருந்தார்.
இப்போது இந்த வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, ஹைதராபாத்திற்கு பறந்துவிட்டார்.
ஹைதரபாத்தில் இப்போது கமல் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறது. இதற்காக மிகப்பிரம்மாண்டமான செட்டை போட்டிருக்கிறார்கள்.
இந்த செட்டில் வைத்துதான் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கிறார்கள். ஹீரோ பிரபாஸை அடித்து துவம்சம் செய்யும் தீயசக்தியாக கமல் நடிக்கிறார்.
இப்படத்தின் கதை கல்கி அவதாரத்தை அடிப்படையாக வைத்து, ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் போது ஹீரோ வந்து காப்பாற்றுவது போன்ற கதையில், மக்களுக்கு தீயவற்றை செய்யும் தீயசக்தியாக கமல் நடிப்பதாக கூறுகிறார்கள்.
இரண்டு பாகங்களாக இப்படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கமல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். ஆனால் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் பாகத்தில் மட்டுமே இடம்பெறும் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.
ரஜினியுடன் மீண்டும் இணைந்திருக்கும் அமிதாப் பச்சன், இப்படம் மூலம் கமல் ஹாஸனுடனும் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹன்சிகா மோத்வானியின் சிறப்பு தள்ளுபடி!
சினிமாவில் நடிகைகளுக்கு இரண்டு பிரச்சினைகள். திருமணம். அடுத்து திருமணத்திற்குப் பிறகும் மீண்டும் நடிக்க வேண்டுமென்ற ஆசை.
இந்த இரண்டு ஆசைகளுமே ஹன்சிகா மோத்வானிக்கு பிரச்சினைகளாகி இருக்கிறது.
தனது ஆண் நண்பரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. ஆனால் காதல் கணவர், ஹன்சிகா தோழியின் கணவர் என்றும், அவர்களைப் பிரித்து ஹன்சிகா திருமணம் செய்து கொண்டாரா என்ற பிரச்சினை ஆரம்பத்தில் கிளம்பியது.
இதனால் காதல் கணவர் தானாக முன்வந்து, அப்படியெதுவும் இல்லை. நானும் என் முதல் மனைவியும் விவாகரத்து செய்து கொண்ட பிறகுதான், ஹன்சிகாவை காதலிக்கவே ஆரம்பித்தேன் என்று திருமண பிரச்சினையை முடித்து வைத்தார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஹன்சிகா. இப்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதே ஹன்சிகாவுக்கு பிரச்சினையாகி இருக்கிறதாம்.
திரைப்பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை. திருமணத்திற்கு முன்பு கமிட்டான படங்களும் வெளிவந்த வேகத்தில் திரும்பிவிட்டன. இதனால் சோர்ந்துப் போனவர் வெப் சிரீஸ் பக்கம் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.
சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதாலும், தொடர்ந்து நடித்ததாலும் எனக்கு அதிக வயதாகிவிட்டது என மக்கள் நினைக்கிறார்கள். இதனால்தான் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்று வெளிப்படையாக தனது நட்பு வட்டாரத்தில் புலம்பும் ஹன்சிகா, இப்போது பட வாய்ப்புகளுக்காக சிறப்புத்தள்ளுபடியை அறிவித்திருக்கிறாராம்.
அதாவது சம்பளம் ஒரு பிரச்சினையே இல்லை. பேசி முடிவு செய்து கொள்ளலாம். கதையில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்து சம்பளத்தை குறைத்து கூட வாங்க நான் தயார் என்று சிறப்புத்தள்ளுபடியை தனது மேனேஜர் மூலம் சொல்லி இருக்கிறாராம்.
ஹன்சிகாவின் இந்த தள்ளுபடிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்குமா என்பது இனிதான் தெரியும்.
மீண்டும் குற்றப்பரம்பரை பஞ்சாயத்து!
சினிமாவில் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு கனவு திரைப்படம் இருக்கும். தங்களது சினிமா பயணம் முடிவதற்குள் அதை எப்படியாவது எடுத்து திரையில் பார்த்துவிடவேண்டுமென துடிப்பார்கள்.
பாரதிராஜாவுக்கு அப்படியொரு படம்தான் ‘குற்றப்பரம்பரை’. அவருடைய ஆஸ்தான எழுத்தாளர் ரத்தின குமார் எழுதிய கதையை படமாக எடுக்க பாரதிராஜா இன்றும் ஆவலோடு இருக்கிறார்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, எழுந்த அடக்குமுறைக்கு எதிரான சட்டத்தை எதிர்த்துப் போராடி தங்களது உயிரை மாய்த்தவர்கள் ஏராளமானோர். ஆங்கிலேயர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களின் போராட்டம் தொடர்பாக, ஆய்வுகள் மேற்கொண்ட ரத்தினகுமார், அதை ஒரு கதையாகவே எழுதி முடித்துவிட்டார். இதைதான் பாரதிராஜா திரைப்படமாக எடுக்க விரும்பினார்.
இதற்காக தேனியில் விழா நடந்தது. உசிலம்பட்டிக்கு அருக்கேயுள்ள கிராமம் ஒன்றில் ’குற்றப்பரம்பரை’ படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. ஆனால் அந்தப்படம் அந்த பூஜையோடு அப்படியே நின்றுப்போனது.
இதனால் பல ஆண்டுகளாக ’குற்றப்பரம்பரை’ பாரதிராஜாவுக்கு நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது.
இந்த சூழலில்தான் இயக்குநர் பாலா, வேல ராமமூர்த்தி எழுதிய கதையை திரைப்படமாக எடுக்க விரும்பினார். ‘குற்றப்பரம்பரை’யை எடுக்க போகிறேன் என பாலா கூறியதால், 2016-ல் பிரச்சினை வெடித்தது.
பின்னர் இதுவும் அடங்கிப் போனது.
இப்பொது குற்றப்பரம்பரையை ஒரு வெப் சிரீஸ் ஆக எடுக்கும் திட்ட த்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநரும் நடிகருமான சசி குமார். ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் இதை தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
சசி குமார் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கவும் முடிவானது. மேலும் இதில் அனுராக் காஷ்யப், சத்யராஜ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இத்தொடருக்கான டெஸ்ட் ஷூட்டையும் சசி குமார் முடித்துவிட்டார். ஆனால் திட்டமிட்டப்படி ஷூட்டிங்கை தொடங்க முடியவில்லையாம்.
காரணம் ‘குற்றப்பரம்பரை’ என்ற டைட்டில் பிரச்சினைதானாம். ரத்தின குமார்தான் தனது கதைக்கு குற்றப்பரம்பரை என்று பெயர் வைத்திருந்தார். இந்தப் பெயரிலேயே படமெடுக்க நினைத்த சசி குமாருக்கு அந்த பெயரை வைத்து படமெடுக்க ரத்தினக்குமார் சம்மதிக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.