கமல்ஹாசனின் திரையுலக வளர்ச்சியில் பாலச்சந்தரைப் போலவே எஸ்.பி.முத்துராமனுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ‘சகலகலா வல்லவன்’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஆடுபுலி ஆட்டம்’ உட்பட கமலை நாயகனாக வைத்து 10 படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.முத்துராமன்.
கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய சில நினைவுகளை ‘வாவ் தமிழா’வுக்காக பகிர்ந்துகொண்டார்…
கமல் முதலில் அறிமுகமான “களத்தூர் கண்ணம்மா’ படம்தான் உதவி இயக்குநராக நான் அறிமுகமான முதல் படம். அந்த வகையில் கமலை தூக்கி வளர்த்தவன் என்ற பெருமை எனக்கு உள்ளது.
சிறுவனாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்த காலத்திலேயே கமலுக்கு சினிமாவில் ஆர்வம் அதிகம். அந்த படத்தின் படப்பிடிப்பிலேயே இது நன்றாக தெரிந்தது. படப்பிடிப்பின் இடைவேளையில் மற்ற சிறுவர்கள் எல்லாம் விளையாடச் செல்வார்கள். ஆனால் கமல் மட்டும் அங்குள்ள ஆபரேடர் ரூமுக்கு போய் படம் பார்ப்பார். பிறகு வெளியில் வந்து அந்த படத்தின் காட்சிகளை அப்படியே நடித்துக் காட்டுவார். விளையாடக்கூடிய பருவமான 4 வயதிலேயே கமலுக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை. சினிமாவில்தான் ஆர்வம். அன்று இருந்த கலை ஆர்வம் கமலுக்கு இன்னும் இருக்கிறது. சினிமா அவருக்கு தொழில் அல்ல. சினிமாதான் அவரது உயிர் மூச்சு.
ஆரம்ப காலத்தில் எனக்கும் கமலுக்கும் இடையே இருந்த பாசம் இன்னும் அப்படியே இருக்கிறது. கமலுக்கு மக்ரூனி ரொம்ப பிடிக்கும். நான் எப்போது கமலை பார்க்கப் போனாலும் அதை வாங்கிக் கொடுப்பேன். அதுபோல் எனக்கு பாரி கம்பெனியில் தயாரிக்கப்படும் முந்திரி சாக்லேட் மிகவும் பிடிக்கும். அந்த சாக்லேட் சென்னையில் கிடைக்காது. மும்பையில்தான் கிடைக்கும். அதனால் கமல் எப்போது மும்பைக்குப் போனாலும் எனக்கு அந்த சாக்லேட்டை வாங்கி வந்து தருவார்.
படங்களை இயக்கும்போது கமல் தலையிடுவாரா என்று சிலர் என்னிடம் கேட்டுள்ளனர். ஒரு படம் நன்றாக வருவதற்காக சில யோசனைகளைச் சொல்வதை நான் தலையீடு என்று சொல்லமாட்டேன். ஒரு படத்தை எடுக்கும்போது ஏதாவது சிறு தவறு நடப்பதாக ஒரு டெக்னீஷியனுக்கு தெரிந்தால் அதை அவரால் சுட்டிக்காடாமல் இருக்க முடியாது. அப்படி தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் அவர் குற்றவாளி ஆகிவிடுவார். அந்த வகையில் படப்பிடிப்ப்ன்போது அவர் சொல்லும் சில மாற்றங்களை செய்துள்ளேன்.
கமலுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதையெல்லாம் காட்சிகளாக வைத்து பஞ்சு அருணாச்சலம் எழுதிய கதைதான் ‘சாகலகலா வல்லவன்’. அப்படத்தை நான் இயக்கினேன். வித்தியாசமான முறையில் படங்களை எடுக்க வேண்டும் என்று விரும்புபவர் கமல். அதனால் கமர்ஷியல் படமான ‘சகலகலா வல்லவன்’-ல் நடிக்க அவர் ஆரம்பத்தில் சற்று தயங்கினார். வழக்கமான பார்முலா படமாக அது இருப்பதாக அவர் நினைத்தார். ஆனால் நான், ‘இப்போது உனக்கு இருப்பது ஏ சென்டர் ரசிகர்கள். இப்படத்தை செய்தால் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களும் உனக்கு வருவார்கள். இந்தப் படத்தை எங்களுக்காக செய். இது உனக்கும் லாபத்தைக் கொடுக்கும்’ என்று சொல்லி சம்மதிக்க வைத்தேன். படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ் சினிமாவில் நிறைய சோதனைகளை செய்து பார்த்தவர் கமல். மக்கள் விரும்பும் படங்களை செய்வதைவிட, தான் வித்தியாசமாக செய்யும் படங்களை மக்கள் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இதனால் அவர் சில இழப்புகளைக்கூட சந்தித்ததுண்டு. ஆனாலும் அவர் தன் கொள்கையில் இருந்து மாறாமல் வித்தியமான படங்களை அளித்து வருகிறார்.