கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்ததாக நேற்று (19-06-2024) அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவர்கள் அனைவரும் கடந்த திங்கட்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதாகவும் உறவினர்கள் கூறினர். இந்நிலையில், நேற்று நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு கல்லூரி மருத்துவமனை வரை 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்தன. அவர்களை மருத்துவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதிக பாதிப்பு உள்ளவர்களை சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் மூன்று பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் இறந்ததாக தகவல் வெளியானது. அடுத்தடுத்த உயிரிழப்புகளால், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தது. 13 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்றைய தினம் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னரும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 150க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சாராய வியாபாரி கைது, எஸ்பி சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர், எஸ்.பி. மட்டுமின்றி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி மற்றும் உதவி ஆய்வாளர் பாரதி, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மனோஜ் உள்பட மேலும் 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்கள். தொடர்ந்து உயர் தரமான சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெத்தனால் கொண்டு வந்த விற்பனை செய்த கன்னுக்குட்டி என்னும் கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது காவல்துறையின் கவனக்குறைவால் நடந்திருப்பது கண்டறியப்பட்டு, கள்ளக்குறிசி எஸ்.பி. உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும். யாருக்கும் அரசு பரிவு காட்டாது.” என்று கூறப்பட்டுள்ளது.
மெத்தனால் கலப்பால் உயிரிழப்பு
அரசு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்த உயிரிழப்புகளுக்கு, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வாவ் தமிழா யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம், “கள்ளச்சாராயத்திற்கும், விஷ சாராயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. மதுவை அரசு அனுமதியில்லாமல், உரிமம் இல்லாமல் காய்ச்சி குடித்தால் அது கள்ளச்சாராயம். அதுவே, போதைக்காக மெத்தனால் கலக்கப்படும் போது விஷ சாராயமாகி விடும். எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும். அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்.
மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால், அடுத்த சில விநாடிகளில் வயிறும் குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும். அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர்” என்றார்.
கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் வந்தது எப்படி?
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சி, அதனை கண்ணுகுட்டி வாங்கி வந்து, கருணாபுரத்தில் இதற்காக தனி வீடு ஒன்றில் வைத்து பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு பாக்கெட் ரூ.60 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த கள்ளச்சாராயம், மலிவு விலையில், அதிக போதை தருவதால், அக்கிராமத்தினர் சிலர் தொடர்ந்து வாங்கி அருந்தியுள்ளனர்.
பாக்கெட் போடுவதுடன் வீட்டில் 24 மணி நேரமும் சாராயம் விற்றுள்ளார் கண்ணுகுட்டி. அதுமட்டுமல்லாமல் கண்ணுகுட்டி வீட்டில் இருந்து ஏஜென்டுகளுக்கும் பாக்கெட் சாராயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.