தமிழ் சினிமாவில் விசில் ப்ளோயர்களை (whistle Blower) பற்றி வந்திருக்கும் முதல் படம்.
தவறு செய்தவர்களை காத்திருந்து, திட்டமிட்டு தண்டிக்கும் ஹீரோ என சினிமா கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து காட்டப்படும் வழக்கமான கதைதான், ஆனால் எடுத்து கொண்டிருக்கும் கார்பொரேட் சீக்ரெட் என்ற கதைக்களம் புதிது. சி.எஸ்.ஆர் நடவடிக்கைகள் மூலம் சமூகத்தில் நல்லப் பெயர் வாங்கும் கார்பொரேட் நிறுவனங்களின் உண்மையான முகத்தைக் காட்டுகிறான் இந்த ’கலகத் தலைவன்’.
காட்சியைத் தாண்டி நீட்டிக்கவோ, வெட்டவோ அவசியமில்லாத அளவுக்கு வசனத்தை டயலாக் மீட்டரை வைத்து மகிழ்திருமேனி அளந்து அளந்து எழுதியிருப்பார் போல. வசனம் கச்சிதம்.
முன்பெல்லாம் ராஜேஷ் குமாரின் நாவலைப் படிக்கும் போது உண்டாகுமே ஒரு த்ரில்லிங்கான உணர்வு அதை திரைக்கதையில் பக்காவாக பேக்கேஜ் செய்திருக்கிறார்கள். முதல் பாதியில் டாப் கியரில் வேகமெடுக்கும் படம் இரண்டாம் பாதியில் சில இடங்களில் இரண்டாவது கியரில் போவது போல் நினைக்க தூண்டுகிறது.
ஹீரோ என்றால் படம் முழுக்க வந்தே ஆகவேண்டிய அவசியமில்லை. பஞ்ச் டயலாக் பேச வேண்டிய கட்டாயமில்லை. வில்லன் வகையறாக்களை அடித்து துவம்சம் பண்ண வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. டூயட் பாடியே ஆகவேண்டுமென்ற தேவையும் இல்லை. கதைக்கேற்றபடி நடித்தால் மட்டுமே போதுமானது என்பதை உதயநிதி நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார். சினிமா கேரியரில் இது அவரது மெச்சூரிட்டியை காட்டுகிறது.
அநேகமாக படம் முழுக்க காட்சிக்கு காட்சி வில்லன் வரும் படமாக இது இருக்கலாம். இந்த க்ரெடிட் குறித்து பச்சை சட்டை வெள்ளை சட்டை உறுதிப்படுத்தி கொள்ளலாம். அந்தளவிற்கு ஆரவ் ஆக்ரமித்து இருக்கிறார். இவரது ஃபேஸ் வாய்ஸ் அதிர வைக்கிறது. ஆரவை இனி வில்லனாக அடிக்கடி திரையரங்குகளில் சந்திக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.
நிதி அகர்வால் பார்ப்பதற்கு பக்கத்துவீட்டுப் பெண் போல இருக்கிறார். டூயட்டும் இல்லை. க்ளாமருக்கான காட்சியும் இல்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம். அதை முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்.
கலையரசன், அனுபமா குமார் இவர்கள் இருவருக்கும் திரையில் கொஞ்ச நேரம்தான். ஆனாலும் ஹிட் அடித்திருக்கிறார்கள்.
அரோல் கரோலியின் இசையில் பாடல்கள் கவிதைகள் போல் இருந்தாலும், மனதில் நிற்கவில்லை. ஆனால் இத்தனை வருடம் விட்ட இடைவெளியை சரிக்கட்டும் வகையில் தனது பின்னணி இசையில் அதிர வைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
தில் ராஜின் ஒளிப்பதிவில் பெரும்பாலான காட்சிகளை கேண்டிட் ஷாட்களாகவே எடுத்திருப்பது ஒரு த்ரில்லருக்கான டென்ஷனை உருவாக்குகிறது. ஆனால் இதுபோன்ற கேண்டிட் ஷாட்களில் க்ளோஸ்-அப் எடுக்கும் போது உண்டாகும் அவுட் ஆஃப் போகஸை கொஞ்சம் கவனத்துடன் தவிர்த்து இருக்கலாம்.
க்ளைமாக்ஸ் சண்டை ஒரு மெகா சிரீயல் டைப். நீண்ட நேரம் ஓடுகிறார்கள். அடிக்கிறார்கள். இதனால் க்ளைமாக்ஸில் நம்மை டயர்ட்டாக்கி விடுகிறான் கலகத் தலைவன்.
பொதுவாகவே மகிழ்திருமேனியின் படங்களில் லாஜிக் மீறல்கள் அதிகமிருக்காது. ஏதாவது ஒரு லைட்டான ஏரியா இருக்கும். அதை இந்தப் படத்திலும் கவனத்தோடு கையாண்டு இருக்கிறார். உதாரணத்திற்கு, க்ளைமாக்ஸில் உதயநிதி ஸ்டாலினும் ஆரவும் போடும் சண்டையில் சுய நினைவை இழக்கும் உதயநிதிக்கு உடல் பலத்தைவிட மன பலம் அதிகம். ஒரு குத்து விட்டாலும் அது நாக் அவுட்தான் என்பதை அதற்கான லாஜிக், டீடெய்லிங்குடன் காட்டியிருப்பது.
அடுத்து உதயநிதிக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு காட்சி. அதில் லேடீஸ் ஹேண்ட் பேக்கை வைத்து அவர்களது கேரக்டரை அலசுவதில் இருக்கும் ரிசர்ச் ரசிக்க வைக்கிறது.
க்ளைமாக்ஸில் கெமிக்கல் காக்டெயில் என்னும் பொடி ஆரவ் மற்றும் அவரது டீம் மீது படுவதால் அவர்கள் சூரிய வெளிச்சத்திற்கு வந்ததும் எரிந்து சாம்பலாகிறார்கள் என்று காட்டிவிட்டு, ஆரவ் சட்டையை மட்டும் கழற்றிக் கொண்டு சூரிய வெளிச்சத்தில் கெத்தாக நடக்கிறார் என்று காட்டும் போது எல்லோருக்கும் ஒரு ஏமாற்றம். ‘டெர்மினேட்டர்’ ஸ்டைலில் எல்லா உடைகளையும் களைந்துவிட்டு கோலிவுட் அர்னால்ட் மாதிரி ஆரவ் சண்டைப் போட போகிறார் என எதிர்பார்த்தால் பட்டென்று முடித்துவிட்டார்கள்.