இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்துவரான கே. எம். செரியன் பெங்களூருவில் கடந்த 25-ம் தேதி காலமானார். பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சு வர்றாங்க.
மருத்துவர் கே.எம்.செரியன், கேரளாவில் உள்ள காயம்குளத்தில் 1942-ம் வருடம் பிறந்தார். மருத்துவப் படிப்பை முடித்த அவர், 1970-ம் ஆண்டில் வேலூர் சிஎம்சி (Christian Medical College) மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றினார். பிறகு இதய அறுவை சிகிச்சை துறையில் மேலும் அனுபவம் பெற இங்கிலாந்துக்கு சென்றார்.
இங்கிலாந்தில் FRCS முடித்த பிறகு நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு, உலகத்தரத்தில் திறமையான இதய அறுவை சிகிச்சை வல்லுநராக உருவெடுத்தார். தன் 26 வயதிலேயே ஆஸ்திரேலியாவில் திறந்த நிலை அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். சர்வதேச அளவில் பணி வாய்ப்புகளையும், பாராட்டுகளையும் பெற்றாலும், அதையெல்லாம் விட்டு இந்தியாவுக்கு வந்து தன் மருத்துவ சேவைகளை தொடர்ந்தார்.
1975-ல் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவின் முதல் இதய பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’ என்று அவர் அழைக்கப்பட்டார்.
தனது வாழ்நாளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை கே.எம்.செரியன் செய்துள்ளார். மருத்துவ துறையில் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு 2005-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த கே.எம்.செரியனுக்கு சனிக்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்த மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செரியன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
பெங்களூரில் காலமாவதற்கு 2 நாட்கள் முன்புதான் ‘just an instrument’ என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலை கேரளாவில் நடந்த இலக்கிய திருவிழாவில் கே.எம்.செரியன் வெளியிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது சிறு வயதில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று படித்த்து, 5-ம் வகுப்பு தேர்வில் கணக்கு பாடத்தில் பூஜ்யம் மதிப்பெண்ணை எடுத்தது போன்ற சுவாரஸ்யமான பல விஷயங்களை செரியன் பேசியிருந்தார். வளைகுடா போரின்போது 20 ஈராக்கிய குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து அதற்குப் பதிலாக ஈராக்கில் இருந்து 4 இந்திய ஓட்டுநர்களை விடுவித்ததைப் பற்றியும், அன்னை தெரசாவின் வேண்டுகோளுக்கு இணங்க கொல்கத்தாவில் ஒரு ஏழைச் சிறுவனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்த்தையும் அவர் நினைவு கூர்ந்து இருக்கிறார்.
பிறப்பதற்கு முன்பே தான் ஒரு இருதய மருத்துவராகப் போவதாக மூணாரைச் சேர்ந்த ஒரு படுகர் இனத் தலைவர் தன் அம்மாவிடம் சொன்னதாக பல இடங்களில் கே.எம்.செரியன் பேசி இருக்கிறார். அதுபற்றி பேசும்போது, “நான் என் அம்மாவின் கருவில் இருந்தபோது, என் அம்மா மூணாறு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள படுகர் இன தலைவர் ஒருவரை என் அம்மா சந்தித்துள்ளார். அவர் என் அம்மாவிடம், ‘உனக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு வலது மணிக்கட்டில் ஒரு மச்சம் இருக்கும். அவன் ஒரு சிறந்த இருதய மருத்துவராக வருவான்’ என்று கூறியிருக்கிறார். அப்போது என் தாய் அதை நம்பவில்லை. ஆனால் பிற்காலத்தில் நான் அவர் சொன்னபடி ஒரு இருதய மருத்துவர் ஆனேன்” என்று சொல்லியிருக்கிறார்.