அமெரிக்க இளைஞர் ஒருவரின் வலைதளப் பதிவு ஒன்று உலகின் முன்னணி ஜிப் தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான என்விடியாவுக்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் அதிகம் உலா வரும் பெயர் ஜெஃப்ரி இமானுவேல். அமெரிக்காவை சேர்ந்த சமூக ஊடக வலைதளப் பதிவாளரான இவர், கடந்த ஜனவரி மாதம் இறுதியில் மேற்கொண்ட பதிவில், சீன தயாரிப்பான AI டீப்சீக் செயலி முதல் இடத்தை பிடித்ததற்கான காரணங்களை பட்டியலிட்டு இருந்தார். AI நுட்பங்களை பயன்படுத்த என்விடியா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க மக்களிடம் இருந்து அதிக தொகையை வசூலிப்பதாக குற்றச்சாட்டி இருந்தார்.
சீனாவின் டீப்சீக் செயலி அதே நுட்பங்களை மிக மலிவான கட்டணத்தில் வழங்குவதாலேயே குறுகிய காலத்தில் அமெரிக்க மக்களிடம் பிரபலம் அடைந்து முதல் இடத்தை பிடித்ததாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் என்விடியா போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்க மக்களை ஏமாற்றி இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் ஜெஃப்ரி இமானுவேல் தெரிவித்து இருந்தார். ஜெஃப்ரி இமானுவேலின் இந்த பதிவு பெரும் வைரலான நிலையில், கடந்த திங்கள் முதல் அமெரிக்க பங்கு சந்தைகளில் என்விடியாவின் பங்குகள் 12%க்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தன.