பொதுவாகவே ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் பிற உலக நாடுகளில் இருப்பவர்களை விட அதிக ஆயுள் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர். இங்கு முதியவர்கள் வாழ்வதற்கு மட்டுமே சில பிரத்தியேக இடங்களும் உள்ளன. ஆனால் அவர்களை பார்த்துக் கொள்வதற்கான ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டின் தரவுகளின் படி, ஜப்பானில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயது உடையவர்களின் எண்ணிக்கை 36. 25 மில்லியனாக இருப்பதாக கூறப்படுகிறது. இதில், 20.53 மில்லியன் பெண்கள் மற்றும் 15.72 மில்லியன் ஆண்கள் எண்ணிக்கையில் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன.
ஜப்பானின் மொத்த மக்கள்தொகையை கணக்கு போட்டு பார்க்கும்போது, இதில் முதியவர்களின் எண்ணிக்கை மட்டும் தற்போது 29.3% ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஜப்பானில் இந்த அளவிற்கு முதியவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததில்லை என அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.
சிறைக்கு வரும் மூதாட்டிகள்
ஜப்பானின் டோக்கியோ நகருக்கு வடக்கே, பெண்களுக்கு என மிகப் பெரிய சிறை உள்ளது. இந்த சிறையில் சுமார் 500 கைதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறையில் இருக்கும் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் ஆக இருக்கிறார்கள். இது ஏன் என தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட சிலர், அங்கிருக்கும் பெண் கைதிகளிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இதற்கு அந்த சிறையில் இருப்பவர்கள் கூறிய பதில்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நிலையில் மிகவும் கீழ் உள்ளவர்கள் வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறைக்கு விரும்பி வருவதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்த முதியவர்கள் தங்களது பிள்ளைகளால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதாகவும், பல சமயங்களில் அவர்கள் உணவின்றி கஷ்டப்படுவதாகவும் கூறியிருக்கின்றனர். இவர்களின் உடல் நலன் மிதும் யாரும் அக்கறை செலுத்துவதில்லையாம்.