இன்றைய காலகட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களின் முக்கிய தேர்வா ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. கைநிறைய சம்பளம், வாரக் கடைசியில் 2 நாள் லீவ், அவ்வப்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் வொர்க் ஃப்ரம் ஹோம் வசதி என இளைய தலைமுறையை இந்த துறை கவர்ந்திருப்பதற்கு பல காரணங்கள் இருக்கு. இந்த சூழலில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இயங்கிவந்த ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு தனது ஊழியர்களை அந்தரத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துட்டு வந்தாங்க.
கடந்த 15 ஆண்டுகளாக கோவை ஆர்எஸ் புரம் பகுதியில இந்த நிறுவனம் இயங்கிட்டு வந்தது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்துட்டே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில வேலை பார்த்துட்டு வந்தாங்க.
இந்த சூழல்ல போன சனிக்கிழமை, தங்கள் ஊழியர்களுக்கு இந்த நிறுவனத்தில் இருந்து ஒரு ஈ மெயில் அனுப்ப்பபட்டிருக்கு. வேலை தொடர்பான ஏதாவது விஷயத்தை இந்த மெயில்ல அனுப்பி இருப்பாங்கன்னு பார்த்தா…. வேலையே காலின்னும், நிறுவனத்தை இழுத்து மூடப் போறாங்கன்னும் அதிர்ச்சிகரமான செய்தி அந்த ஈமெயில்ல இருந்திருக்கு,
‘Focus Edumatics’ நிறுவனத்தின் சிஇஓ அனுப்பியிருந்த அந்த கடித்ததுல, “கடந்த சில நாட்களாவே நிறுவனத்தோட நிலைமை சரியில்லை. அதை மீட்க எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு பார்த்துட்டோம். ஆனா நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கான சூழல் இல்லை. அதனால நிறுவனத்தை மூடவேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்றைய தினம்தான் இந்த நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றும் கடைசி நாள். தனிப்பட்ட முறையில் உங்கள் எதிர்கால வேலை வாய்ப்புக்கான வழி கிடைக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம்”ன்னு குறிப்பிட்டு இருந்துச்சு.
இந்த கடிதத்தை பார்த்த அதன் தொழிலாளர்கள், தங்களோட எதிர்காலம் என்ன ஆகுமோன்னு துடிச்சுப் போயிருக்காங்க. அவங்களுக்குள்ள கூடிப் பேசி ஆட்சியர் அலுவலகம் முன்னால கூடியிருக்காங்க.
திடீரென நீக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கணும். 3 மாதகால சம்பள தொகையை பெற்றுத் தரணும், 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வருபவர்களுக்கு செட்டில்மென்ட், கிரேடுவிட்டி, உள்ளிட்டவற்றைப் பெற்றுத் தரணும்னு சொல்லி ஆர்ப்பாட்டத்துல ஈடுபட்டு இருக்காங்க. அதனால அங்க பரபரப்பு ஏற்பட்டிருக்கு. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்திச்சு அவங்க மனு கொடுத்திருக்காங்க.
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “அங்கு சுமார் 2,000 பேர் பணியாற்றி வருகிறோம். சனிக்கிழமை திடீரென நிறுவனத்தை மூடப்போவதாக மின்னஞ்சலில் கூறினார்கள். அதற்கான காரணத்தை சொல்லவில்லை. இந்த மாதம் வரை முழுமையாக வேலை செஞ்சிருக்கோம். எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் இருக்கு. அதனால எங்களுக்கு வரவேண்டிய சம்பளம், செட்டில்மென்ட், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்.” என்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாதத்துக்கான ஊதியத்தை கொடுப்பதாக அந்த நிறுவனம் மெயில் அனுப்பியுள்ளது.