விஜய் – வெங்கட் பிரபு – ஏஜிஎஸ் இணைந்திருக்கும் ‘கோட்’ – தி க்ரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் ஜரூராக போய்கொண்டிருக்கிறது. அக்டோபர் 2023-ல் தொடங்கிய ஷூட்டிங் இப்போது ஒவ்வொரு ஷெட்யூலாக திட்டமிட்ட காலத்தில் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய ட்ரெண்டான ஏராளமான நட்சத்திரங்களை ஒரே படத்தில் நடிக்க வைக்கும் ட்ரெண்ட் இந்தப் படத்திலும் இருக்கிறது. மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம், யோகிபாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி என ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகிறது.
இந்தப் படம் நடக்கும் போதே அதன் வியாபாரத்தில் இறங்க ஏஜிஎஸ் முடிவு செய்தது. வழக்கம் போல் விஜய் படம் ஷூட்டிங் நடக்கும் போதே பெரிய விலைக்கு விற்றுவிடலாம் என ஏஜிஎஸ் தரப்பு திட்டமிட்டது.
உதாரணத்திற்கு, ‘லியோ’வின் தொலைக்காட்சி உரிமை சுமார் 80 கோடிக்கும், ஒடிடி- உரிமை சுமார் 120 கோடிக்கும் விற்பனை ஆனதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெளிநாட்டு உரிமை சுமார் 60 கோடிக்கு விலைப் போனதாகவும் தகவல்.
இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு வியாபாரத்தை பெரிய தொகையிலிருந்து ஆரம்பிக்கலாம் என ஏஜிஎஸ் தரப்பு பக்கவாக திட்டமிட்டது. இதை மனதில் வைத்தே கோட் படத்தின் முதல் பார்வையை அடுத்து இரண்டு பார்வைகளையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டது ஏஜிஎஸ்.
இந்த விளம்பர முயற்சி படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என திட்டமிட்டு இப்படி வரிசையாக புதுப்புது பார்வைகளை களத்தில் இறக்கிவிட்டார்கள்.
‘லியோ’ வியாபாரத்தை விட ‘கோட்’ பட வியாபாரம் அதிகம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் ஏஜிஎஸ் ஆரம்பம் முதல் செயல்பட்டு வருகிறது.
ஆனால் இந்த விளம்பர யுக்தி, வியாபார திட்டமிடல் எதுவும் படத்தின் வியாபாரத்திற்கு உதவவில்லையாம். ஏஜிஎஸ் கேட்கும் விலைக்கு வாங்க யாரும் முன்வரவில்லையாம். இதனால் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, ஒடிடி உரிமை என இவை இரண்டும் இன்னும் முடிவாகவில்லையாம். அதனால் இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டே இருக்கிறதாம்.
ஏஜிஎஸ் சொல்லும் விலைக்கு யாரும் தயாராக இல்லையாம். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வெளிநாட்டு உரிமையில் லியோ சொதப்பியதுதானாம். இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை 60 கோடிக்கு வாங்கி வெளியிட்டார்கள். பெரும் எதிர்பார்புடன் வெளியானாலும் படம் அறுபது கோடியை வசூலிக்கவில்லை என்கிறார்கள். இதனால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஏஜிஎஸ் குழப்பத்தில் இருக்கிறதாம்.
லியோவுக்கு விஜய் வாங்கிய சம்பளத்தை விட, கோட் படத்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இதை கணக்குப் பண்ணியே கோட் பட உரிமைகளை அதிக விலைக்குக் கொடுக்க ஏஜிஎஸ் தரப்பு முயற்சித்து வருகிறது. இப்படி வியாபாரம் செய்தால்தான் விஜயின் சம்பளத்தைத் தவிர்த்து லாபம் ஈட்ட முடியும் என விலையைக் குறைக்காமலேயே பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தரப்பு.
கோயில் கோயிலாக செல்லும் தமன்னா
தமன்னா, தனது இரண்டாவது சுற்றில் கவர்ச்சியைக் கையில் எடுத்தது அவருக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. கதாநாயகியாக நடிக்கும் போது கூட தமன்னா இந்தளவிற்கு கவர்ச்சியில் தாராளமயம் காட்டியது இல்லை. ஆனால் இப்போது கவர்ச்சியை மட்டுமே நம்பி களத்தில் இருப்பது அவரை பரபரப்பாகவே வைத்திருக்கிறது.
அடுத்தடுத்து வெப் சிரீஸ், திரைப்படங்களில் பிஸியானவர் அதேவேகத்தில் காதலிலும் பிஸியாகி இருக்கிறார்.
இங்கே தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்கும் போது கூட காதல் வயப்படாதவர் எப்படி இப்போது காதலில் விழுந்தார் என்பது தெரியவில்லை என்று உச் கொட்டும் தரப்பு இங்கே அதிகம்.
சம்பந்தமே இல்லாமல் ஒருவர் இப்போது தமன்னாவின் மனதைக் கொள்ளையடித்தது பலருக்கு புகையைக் கிளம்பியும் இருக்கிறது.
ஆனால் தமன்னா மட்டும் இன்னும் ஏதோ திவீர சிந்தனையில் இருக்கிறாராம். தமன்னாவின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிய விஜய் வர்மாவைப் பற்றி தமன்னா இதுவரையில் ஒரு வார்த்தை சொன்னது இல்லை. அதேபோலதான் விஜய் வர்மாவும். ஆனால் இப்போது இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே தங்களது உறவைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டப்படியே இருக்கிறார்கள்.
இப்படியொரு சூழலில்தான் தமன்னா, கோயில் கோயிலாக சென்று வருகிறார். இந்தியாவில் ஆங்காங்கே பரவியிருக்கும் கோயில்களில் விசேஷமான கோயில்களுக்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பரிகாரம் செய்யும் கோயில்களுக்குச் செல்கிறார்.
சமீபத்தில் அஸ்ஸாமில் இருக்கும் கமாக்யா கோயிலுக்கும் சென்று வந்திருக்கிறார் தமன்னா.
ஆன்மிக சுற்றுலா போல் கோயில்களுக்குப் போவதைப் பற்றி தமன்னா இதுவரையில் எதுவும் கூறவில்லை. தனது போட்டோகளை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொண்டதும் இல்லை.