No menu items!

மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாதபோது கார் பந்தயம் தேவையா ? – அமீர் பரபரப்பு

மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாதபோது கார் பந்தயம் தேவையா ? – அமீர் பரபரப்பு

திரைப்பட விழாக்கள் எப்போதும் திரைப்படங்களை முன்னிறுத்தி அதை விளம்பரபப்டுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும். ஆனால் சமீபத்தில் நடந்த கெவி திரைப்படத்தின் விழாவில் இயக்குனர் அமீர் பேசிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அமீர் பேசும்போது, “இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவரும் எனக்கு நன்றி சொன்னார்கள். ஆனால் படத்தின் இயக்குநர் நன்றி சொல்லவில்லை. இதை அவரை குத்திக்காட்டுவதற்காக சொல்லவில்லை. இந்த மேடையிலேயே அவர் என்ன பேசுவது என்று தெரியாமல் திக்கித் திணறி நின்றார். காரணம் அவரது மனம் முழுவதும் இந்த படத்திற்காக அவர் பட்ட சிரமங்களும் அந்த படப்பிடிப்புத் தளத்தில் நடந்த நிகழ்வுகளும் மட்டும் தான் ஓடிக்கொண்டிருந்திருக்கும். இந்த கிராமத்தில் இருந்து மருத்துவ வசதிகளுக்காக குறிப்பாக பெண்களின் பிரசவத்திற்காக குறித்த நேரத்தில் நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சொல்ல முடியாமல் பலர் உயிரிழந்துள்ளனர். டோலியில் அவர்களை தூக்கிக்கொண்டு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நடந்தே பயணம் செய்ய வேண்டும். இவர்கள் படமாக்கிய அதே ஊரில் சமீபத்தில் கூட இதே போன்று தாமதத்தால் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தார் என்று செய்தி வெளியானது.

இந்த மாதிரி சாலை வசதி இல்லாத பல மலை கிராமங்கள் இருக்கின்றன. ஆற்றைக் கடப்பதற்காக கயிற்று பாலத்தில் தொங்கிக்கொண்டு அக்கரைக்குச் சென்று படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் இருக்கின்றனர். சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது. அப்படி இருக்கையில் இதுபோன்று மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சாலை வசதிகளை மேம்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. ஏனென்றால் இது அடிப்படை தேவை. ஊடகங்கள் இந்த செய்தியை அரசாங்கத்திற்கு கடத்த வேண்டும் என்பதுதான் இந்த படக்குழுவினரின் நோக்கம். அதற்காகத்தான் நானும் ஒரு ஸ்பீக்கர் ஆக வந்து இங்கே நிற்கிறேன்.

இதற்கு முன்னதாக ஜெய் பீம் படம் வெளியானபோது இருளர்களின் பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்து தமிழக அரசு தலையிட்டு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பட்டா வழங்குவது உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது. அதேபோல கெவி திரைப்படமும் அந்த ஊர் மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் அதற்காக நானும் வேண்டிக்கொள்கிறேன். அந்த வகையில் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த கெவி படத்தை கொண்டு போக வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்பதே உண்மை.

படக்குழுவினர் தாங்கள் சிரமப்பட்டோம் என்கிற தகவலை கடத்துவதை விட அந்த சிரமங்களை படத்தின் மூலம் ரசிகர்களுக்கு கடத்துவது தான் படத்திற்கு வெற்றி தரும். காரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய வாச்சாத்தி கொடுமையை பற்றி ஒரு திரைப்படம் வெளியானது. ஆனால் அதை முழு நேரம் நம்மால் பார்க்க முடியாது. அதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். திரையரங்குக்கு வந்த பின்பு பேசி பிரயோஜனம் இல்லை.

சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுதான் அந்த படத்தின் வெற்றி. அதேசமயம் பக்கத்தில் இருக்கின்ற ‘கொட்டுக்காளி’ படம் திரைப்பட விழாக்களுக்கான சினிமா. அதனால் அது நல்ல படம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அப்படி திரைப்பட விழாக்களில் விருதுகளை பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையரங்குகளில் மற்ற படங்களுடன் கொண்டு வந்து போட்டி போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையது அல்ல. அப்படி செய்யவே கூடாது. விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்று கூட பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணம் அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு உங்கள் படத்தை பார்ப்பது தான். அதனால் அவர்களுக்கு அந்த உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால் அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற படங்களுக்கு அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்து விட வேண்டும். அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி அதை ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு விற்றிருக்கலாம். அதிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுபவர்கள் ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்த்துக் கொள்வார்கள். கெவி படம் கூட அப்படி எடுக்கப்பட்டிருக்கலாம். நாளை இதை திரையரங்குகளில் கொண்டு வந்து வைத்துவிட்டு ரசிகர்கள் பார்க்கவில்லையே என அவர்களை குறைபட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் மக்களிடம் சேரும் விதமாக இந்த கெவி படத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.

ஒலிம்பிக்கை கூட நம் நாட்டில் நடதத்துவதற்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு அதிபர்கள் வரும்போது நம் ஊரில் இருக்கும் குடிசைகளை பச்சை துணி போட்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசியன் கேம்ஸ் நடத்துவதற்காக கிராமங்களை உருவாக்குகிறார்கள். விளையாட்டுக்காக கிராமங்களையே உருவாக்குகிற நாடு உண்மையான சாலை வசதி இல்லாத கிராமத்திற்கு அதை ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமானது. அதைக் கேட்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதை இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் கேட்டிருப்பதாக நான் உணர்கிறேன். இந்தப் இந்த படத்தின் தயாரிப்பாளரை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது கூட குறைந்தபட்சம் எப்படியாவது இந்த திரைப்படத்தை அவர் தியேட்டர் வரை கொண்டு வந்து விடுவார் என்கிற நம்பிக்கையில் தான். அதை தவறு என்று சொல்ல முடியாது. அதுவும் ஒரு புத்தி சாதுரியம்தான். அதை சரியாக செய்யும் போது அவரும் பயனடைகிறார். நீங்களும் பயனடைகிறீர்கள்..

இந்த படத்தின் சில காட்சிகளை பார்த்தபோது ஏன் என்னிடம் இந்த கதையை எடுத்துக்கொண்டு வராமல் போனார்கள், இதை நாம் பண்ணிக் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றியது. சில ஷாட்டுகளை பார்க்கும்போது படத்தை சரியாக எடுத்து இருக்கிறீர்கள் என தோன்றுகிறது முழுப்படமும் அந்த உணர்வைக் கொடுத்து விட்டால் வெற்றி தான். எப்படி ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக முதல்வர் பார்த்தாரோ அதேபோல உங்களது படமும் நன்றாக இருந்தால் பத்திரிகையாளர்கள் தங்கள் விமர்சனங்கள் மூலமாக இந்த படத்தை தமிழக முதல்வர் பார்க்க வேண்டும் என கோடிட்டு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலம் ஏதாவது மாற்றம் அந்த மக்களுக்கு நிகழும் என்று நானும் காத்திருக்கிறேன்”என்று பேசினார் அமீர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...