இந்தியா சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைந்து 78-வது ஆண்டு தொடங்கப் போகிறது. சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசியக் கொடியை ஏற்றும்போது நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்… கொடிக்கு எந்தெந்த வகையில் மரியாதை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
கொடியை ஏற்றும்போது நாம் கவனமாக ஏற்ற வேண்டும். நம் தேசியக் கொடியை பொறுத்தவரை மேலே காவி நிறமும் கீழே பச்சை நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது. துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடியைத்தான் பயன்படுத்த வேண்டும். பருத்தி, பாலியஸ்டர், கம்பளி, காதி, பட்டு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை பறக்க விடலாம்.
2002-ம் ஆண்டு இந்திய தேசியக் கொடி சட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மக்களும் மூவர்ணக் கொடியை ஆண்டு முழுவதும் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு.
தேசியக் கொடியை ஏற்றும்போது விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும்போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். பழுதடைந்த, அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக் கூடாது.
நாம் பயன்படுத்திய தேசியக் கொடியை எந்த காரணத்தாலும் குப்பைத் தொட்டியில் போடக்கூடாது.
சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்கு தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது.
கார்களில் கொடிகளைப் பறக்க விட விரும்பினால், நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.
தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லும்போது, வலப் பக்கமாக ஏந்திச் செல்ல வேண்டும். மேலும், மற்ற கொடிகள் நிறைய இருந்தால், அனைத்து கொடிக்கும் முன்பு தேசியக் கொடி இருக்க வேண்டும்.
பல நாடுகளின் தேசியக் கொடியை பறக்கவிடும் பட்சத்தில் நம் நாட்டின் தேசியக் கொடி முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் மற்ற நாடுகளின் கொடியை இறக்கிய பிறகே நமது தேசியக் கொடியை இறக்கவேண்டும்.
நாம் பறக்கவிடும் தேசியக் கொடியின் நீளமும் அகலமும் 3:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும்.
தேசியக் கொடியின் மீது எந்தவொரு வாசகத்தையும் எழுதக்கூடாது.
தேசியக் கொடியை எந்த கட்டத்திலும் இடுப்பிற்குக் கீழே அணியக்கூடாது. தேசியக் கொடியை கால்சட்டையாக அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கொடி எந்த கட்டத்திலும் தரையில் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.