இளையராஜாவை சுற்றி அவ்வப்போது பரபரப்பு சுழன்றுக்கொண்டே இருக்கும். இன்று அதிகாலையே இணையத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளையராஜா சென்றிருந்தார். சிறப்பாக வரவேற்று, மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இளையராஜாவுக்கு தடபுடலாக மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சி மேடையில் இளையராஜா ஏறியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. எல்லாம் சரியாக நடந்த நிலையில், ஆன்மிகச் சிலிர்ப்பு மேலிட, ஜீயர்கள் மற்றும் அய்யங்கார்களுடன் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார். அப்போது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத்துக்குள் அவர்களுடன் சென்றுவிட்டார். ஆனால் உடனே அவர் தடுக்கப்பட்டு அர்த்தமண்டபத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். வாடிய முகத்துடன் அர்த்தமண்டபத்தில் இருந்து வெளியேறிய இளையராஜா, பக்தர்களுடன் பக்தராக வாசலில் இன்று வணங்கினார்.
கருவறை முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. து நவீன தீண்டாமை. அவர் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் சரிக்கு சமம் கிடையாது. அவரிடம் ஜாதி பாகுபாடு காட்டப்படுகிறது என்று நெட்டிசன்கள், ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் வைத்துள்ளனர். ஜாதியை வைத்து ஒருவர் தனது கடவுளை வழிபடவே இங்கே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தவறு என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே, கோயில் மரியாதையை ஏற்றுக்கொண்டார். அங்கே இருந்தபடியே வழிபாடு செய்துள்ளார். அதன்பின் அங்கிருந்து வெளியேறி உள்ளார். கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட ஜாதியில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது, அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர்.
அவர் உள்ளே செல்ல முடியாது. எப்படி செல்லலாம். அவரை எல்லாம் உள்ளே அனுமதிக்க கூடாது என்று ஜீயர்கள் கோஷம் போட்டுள்ளனர். அதோடு அவரை வெளியே செல்லும்படி கூறிய ஜீயர்கள் அங்கேயே முறையிட்டு உள்ளனர். பின் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார் இளையராஜா. கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வேகவேகமாக அங்கிருந்து கிளம்பி சென்றார். முன்னதாக அவர் கிளம்பும் முன் கோவில் நிர்வாகிகள்.. கோவில் விதிப்படி நீங்கள் உள்ளே செல்ல முடியாது. அந்த படி வரை மட்டுமே செல்ல முடியும். அதை தாண்டி செல்ல முடியாது. அதற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தனர்.