சினிமா என்ற தொழில்நுட்ப அடிப்படையிலான கலை கண்டுப்பிடிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அதில் ஆண்களின் ஆதிக்கம்தான் தொடர்ந்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திரங்களுக்கான சம்பள விஷயத்தில் நடிகர்களுக்கு இருக்கும் மார்க்கெட் நடிகைகளுக்கு இருப்பதில்லை.
ஆனாலும் இன்று பல நடிகைகள் தங்களது சம்பளத்தில் கெத்து காட்டி வருகிறார்கள். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், இவர்களது சம்பளம் இரட்டை இலக்க கோடிகளை எட்டியிருக்கிறது. இதனால் இவர்களது சொத்து மதிப்பும் மூன்று இலக்க கோடிகளில் ஆச்சர்யமூட்டுகிறது.
அந்த வகையில் இந்திய சினிமாவில் இருக்கும் பணக்கார நடிகைகளின் பட்டியலை உங்களுக்கு அளிக்கிறோம். இவர்களது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பல ஊடகங்களில் இருந்து தொகுக்கப்பட்டவை.
1.ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக கொண்டாடப்பட்டவர். இன்றும் நளினமான அழகுக்கு இவர் அடையாளமாக குறிப்பிடப்படுபவர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என இவர் இந்திய சினிமா முழுவதும் தெரிந்த முகம். இவரது சொத்து மதிப்பு சுமார் 765 முதல் 828 கோடி என்கிறார்கள். இந்தியாவின் மிகப் பணக்கார நடிகை என்ற பட்டத்தை ஐஸ்வர்யா ராய் தட்டிச்சென்றிருக்கிறார்.
2.ப்ரியங்கா சோப்ரா
திரைப்பட நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என பன்முக பர்ஸனாலிட்டியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் இருந்து, ஹாலிவுட்டுக்கும் பறந்தவர். உலகளவிலான வெப் சிரீஸிலும் நடித்து வருபவர். ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு அதிக சொத்து மதிப்புடைய நடிகை. இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 580 கோடி முதல் 650 கோடி. பல விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இவர் ‘பர்ஃபி’, ‘மேரி கோம்’ போன்ற படங்களில் நடித்தவர்.
3.ஆலியா பட்
பாலிவுட்டில் ஏடாகூடமான படங்களை இயக்கிய, தயாரித்த இயக்குநர் மகேஷ் பட். இவரது செல்ல வாரிசுதான் இந்த ஆலியா பட். நடிக்க வந்தபோது, மகேஷ் பட் மகள் என்பதற்காக இவர் நடிக்கும் படங்களைப் பார்க்க வேண்டுமா என்று ரசிகர்கள் கிண்டலடிக்கும் வகையில் நடித்தவர், இன்று நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். இந்தியாவின் முன்னணி நடிகைகளில் இவருக்கு முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்று தொடர்ந்து இருந்து வருகிறது. சினிமாவில் நடிகையாக இருந்தால், சம்பாதிக்க முடியாது என புரிந்து கொண்டவர், வியாபாரங்களிலும் இறங்கினார். இதனால் இவரது சொத்து மதிப்பு பட்டென்று 500 கோடி முதல் 557 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
4.கரீனா கபூர்
திரைப்பட குடும்ப பின்னணியில் இருந்து வந்ததால், இவருக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்தவர், இப்போது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ’ஜப் வி மெட்’, ‘3 இடியட்ஸ்’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்த கரீனா கபூருக்கு 500 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது.
5.தீபிகா படுகோன்
இன்றைய இளைய தலைமுறையின் ஆதர்ச நாயகி. பிரபல பேட்மிண்டன் சாம்பியன் பிரகாஷ் படுகோனின் தவப்புதல்வி. விளம்பரங்களில் நடிக்கும் மாடல் ஆக பொது வாழ்க்கையை தொடங்கியவர், இன்று பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி. திருமணத்திற்குப் பின்பும் கவர்ச்சியில் ஒரு புது கிளர்ச்சியை உருவாக்கியிருக்கிறார். இவர் நடித்த ‘யே ஜவானி ஹை திவானி’, ‘பத்மாவத்’ போன்ற படங்கள் இவருடைய நடிப்புக்கு உதாரணமாக இவரது பயோடேடாவில் இடம்பிடித்திருக்கின்றன. சினிமா, விளம்பரம் என இவர் நாளுக்கு நாள் அள்ளிக்குவித்து கொண்டிருக்கிறார். இதனால் சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே இவரது சொத்து மதிப்பு 315 கோடி முதல் 400 கோடியைத் தொட்டிருக்கிறது.
6.அனுஷ்கா சர்மா
விளம்பர மாடலாக குட்டித்திரையில் வந்தவரை, பெரிய வெள்ளித்திரை வாரியணைத்து கொண்டது. கவர்ச்சியில் திளைக்க வைத்தவரை, விளம்பரங்களில் நடித்த போது காதலில் விழ வைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபராக இருக்கும் அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் இணைந்து விளம்பரங்களில் நடிப்பதால் இந்த ஜோடியின் சம்பளம் பொறாமைப்பட வைக்கிறது. அனுஷ்கா சர்மாவின் சொத்து மதிப்பு 255 கோடி முதல் 300 கோடியை எட்டியிருக்கிறது.
7.மாதுரி தீட்சித்
1980-களில் இளைஞர்கள், முன்னாள் இளைஞர்கள் என அனைத்து ஆண்களின் மனங்களையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் மாதுரி தீட்சித். இவர் நடித்த முதல்ப்படம் ‘அபோத்’, செம ப்ளாப். அடுத்தடுத்து நடித்த 7 படங்களும் பாக்ஸ் ஆபீஸில் செல்லுபடியாகவில்லை. ‘தேசாப்’ என்ற படம் வந்ததும், பாலிவுட்டில் ஆரம்பித்தது மாதுரியின் சாம்ராஜ்ஜியம். முகமெல்லாம் பருக்கள். இவரா ஹீரோயின் என்று இவரை தவிர்த்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் இவரது கால்ஷூட்டுக்காக காத்திருந்தது வரலாறு. மாதுரி தீட்சித்துக்கு இந்தியாவில் இருப்பதைப் போலவே பாகிஸ்தானிலும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது சொத்து மதிப்பு 248 கோடி முதல் 300 கோடி வரை இருக்கிறது.
8.காத்ரீனா கைஃப்
தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் ஆவின் பால் நிரப்பிய நீச்சல் குளத்தில்தான் குளிப்பாரோ என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ஜொலிக்கும் அழகி. ‘ஸிந்தகி நா மிலேகி தோபாரா’, ‘ஏக் தா டைகர்’ போன்ற அசத்தலான படங்களில் நடித்தவர். விளம்பர மாடலாகவும் இன்று கல்லா கட்டிக்கொண்டிருப்பவர். காத்ரீன கைஃப்பின் சொத்து மதிப்பு 217 கோடி முதல் 250 கோடி என்கிறார்கள்.
9.அமீஷா பட்டேல்
அமீஷா பட்டேல் நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் நடித்த ‘கடர் 2’ பாலிவுட்டில் வசூலை அள்ளியிருக்கிறது. இவரும் விளம்பர மாடலாக இருந்து நடிகையானவர். இவரது சொத்து மதிப்பு சுமார் 200 கோடி.
10.ஷ்ரத்தா கபூர்
பத்மினி கோலாப்புரி, லதா மங்கேஷ்கர் என இவரது சொந்தப்பந்தங்கள் சினிமாவில் பிரபலங்கள். 2014-ல் ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 செலிபிரிட்டி பட்டியலில் இடம்பிடித்தவர். அதேபோல் 2016-ல் ஃபோர்ப்ஸ் ஏஷியா வெளியில் 30 அண்டர் 30 பட்டியலிலும் கெத்து காட்டியவர். இவரது சொத்து மதிப்பு 112 கோடி முதல் 125 கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
நடிகைகளின் சொத்து மதிப்பானது அவர்கள் திரைப்படங்களில், விளம்பரங்களில், வெப் சிரீஸ்களில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம், விளம்பர தூதுவர்களாக இருப்பதற்கான சம்பளம், திரைப்பட தயாரிப்பில் வரும் லாபம், சமூக ஊடகங்களில் இருக்கும் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை பொறுத்து இவர்கள் பதிவிடும் போஸ்ட்களின் மூலமான வருவாய், தொழில்களில் கொண்டிருக்கும் முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் அவர்களுடைய சொத்து எவ்வளவு இருக்கும் என்பதன் கணிப்பு மட்டுமே. அதிகாரப்பூர்வமான சொத்து மதிப்பு அல்ல என்பதை நினைவில் கொள்க.