No menu items!

ட்ரம்ப் அறிவிப்பால் இந்தியர்கள் அதிர்ச்சி

ட்ரம்ப் அறிவிப்பால் இந்தியர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக சுமார் 1.37 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. அவர்களை வெளியேற்ற அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் வரையறுத்து உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள், வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர், தங்களது சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றும் சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

45 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு: அமெரிக்காவில் சுமார் 45 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தை சேர்ந்த சுமார் 3.45 லட்சம் பேரும், ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த 12.3 லட்சம் பேரும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். கர்நாடகா, கேரளாவை சேர்ந்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்பி வருகின்றனர். அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் 45 லட்சம் இந்தியர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கடந்த 2023-24-ம் ஆண்டில் 118.7 பில்லியன் டாலரை இந்தியாவுக்கு அனுப்பினர். இதில் 32 பில்லியன் டாலர் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டது ஆகும்.

புதிய மசோதா குறித்து அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் கூறியதாவது: வரும் மே மாதம் மசோதாவை நிறைவேற்றி வரும் ஜூலையில் அமல்படுத்த அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்பிறகு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ரூ.1 லட்சம் அனுப்பினால் ரூ.5,000 வரியாக பிடிக்கப்படும். இந்திய பங்கு சந்தைகள், இந்திய மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்தாலும் 5 சதவீத வரி பிடித்தம் செய்யப்படும். எனவே வங்கிகள், நிதி சார்ந்த அமைப்புகள் மூலம் பணம் அனுப்புவதை தவிர்த்து கிரிப்டோகரன்சி உள்ளிட்ட சட்டவிரோத முறைகளின் மூலம் பணத்தை அனுப்ப சிலர் முயற்சி செய்யக்கூடும். ஆனால் இதில் பல்வேறு சட்டசிக்கல்கள் எழும்.

கை நிறைய பணம் சம்பாதித்து குடும்பத்தினருக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வருகின்றனர். இதை தடுக்கவே அதிபர் ட்ரம்ப் புதிய வரி விதிப்பை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறார். இந்த வரி அமலுக்கு வந்தால் இந்தியர்களுக்கு மட்டும் சுமார் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும். இவ்வாறு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோ அதிபர் எதிர்ப்பு: மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கூறியதாவது: அமெரிக்காவில் வாழும் மெக்ஸிகோ மக்கள் அந்த நாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர். இப்போது புதிதாக ஒரு வரியை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

புதிய மசோதாவால் மெக்ஸிகோ மட்டுமல்ல, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நாடுகளின் தலைவர்களுடன் பேசி அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்தார்.

மெக்ஸிகோவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 4 சதவீதம் வரை அமெரிக்கவாழ் மெக்ஸிகோ மக்கள் அனுப்பும் பணத்தில் இருந்து கிடைக்கிறது. இதனால் அந்த நாட்டின் அதிபர் கிளாடியா பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...