விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு ஷுக்லா (வயது 39) சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு, மிஷன் – 4 (ஏஎக்ஸ் – 4) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரிலிருந்து விண்வெளி செல்லும் விண்கலன் மூலம் வரும் மே 29 ஆம் தேதியன்று இந்த முயற்சி மேற்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சில முக்கிய காரணங்களால் ஜூன் 8 ஆம் தேதிக்கு இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் பணிக்கு ஷுக்லா, மிஷன் பைலட் ஆக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடன், அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலாந்தைச் சேர்ந்த ஸ்லாவொஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னியூஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் காபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்கின்றனர்.
இதுகுறித்து, ஆக்ஸியோம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முயற்சியானது மனிதர்களின் வர்த்தக ரீதியான விண்வெளிப் பயணத்தில் முக்கிய நிகழ்வு என்றும் முதல்முறையாக இந்தியா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளின் விண்வெளி வீரர்கள் ஒன்றாகப் பயணிக்கவுள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, நாசா மற்றும் இஸ்ரோ இடையிலான கூட்டு நடவடிக்கைகளின் அடிப்படையில் ஏஎக்ஸ் – 4 மிஷனுக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தப் பயணத்தின் மூலம், இந்தக் குழுவினர் விண்வெளியில் சில முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.