’இந்தியன் – 2’ படம் வெளிவருவதில் கமலை விட ஷங்கர் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஷங்கரின் படம் வெளிவந்து ஆண்டுகளாகின்றன. இரண்டாவது, இதுவரையில் பிரம்மாண்டமான இயக்குநர் என்று இந்தியா முழுவதிலும் கொண்டாடப்பட்ட ஷங்கருக்குப் போட்டியாக இப்போது எஸ்.எஸ். ராஜமெளலி உருவாகிவிட்டார். அதனால் தன்னுடைய இடத்தை தக்கவைக்க சரியான படமொன்று தேவைப்படுகிறது.
இந்த இரண்டு விஷயங்களையும் பூர்த்தி செய்யும் வகையில், ’இந்தியன் – 2’ இருப்பதால் ஷங்கர் அப்பட வேலைகளில் ஓய்வில்லாமல் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்த முறை ஷங்கர் ஏகப்பட்ட டென்ஷன். இதுவரையில் எடுத்த காட்சிகளின் நீளம் மட்டும் சுமார் 6 மணி நேரம் ஓடுகிறதாம். இதனால் என்ன செய்வது என்று இந்தியன் – 2 படக்குழுவினர் இடையே பெரும் குழப்பம்.
ஆறு மணி நேரப்படத்தை ஒரு மணி நேரம் எடிட் செய்து ஐந்து மணி நேரமாக படமாக்கி விட்டால், இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டதாம்.
அதனால் இரண்டுப் பாகங்களாக இப்படம் வெளிவரலாம் என எதிர்பார்த்த நிலையில், கமலுக்கு இரண்டுப்பாகங்கள் என்பதில் உடன்பாடு இல்லையாம். ஒரே பாகமாகதான் இந்தியன் – 2 வெளியாக வேண்டும் என்பதில் கமல் உறுதியாக இருப்பதால், ஆறு மணி நேர படத்தை மூன்று மணி நேரத்திற்குள்ளாக இருக்கும் படி எடிட் செய்யும் வேலைகள் மும்முரமாக போய் கொண்டிருக்கிறதாம்.
இதில் எதிர்பார்க்காத மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த முறை எடிட்டிங்கில் கமலும் உட்கார்ந்து எடிட்டிங் வேலைகளைப் பார்க்கிறாராம். கமல் கொடுக்கும் ஐடியாக்களின் படி படத்தின் நீளத்தைக் குறைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக ‘இந்தியன் -2’ படக்குழு பக்கம் பேசப்படுகிறது.
மீண்டும் அனுஷ்கா
அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்குள் வரவிருக்கிறார்.
பாகுபலி -1, பாகுபலி -2, பாகமதி ஆகிய படங்களுக்குப் பிறகு அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
அனுஷ்காவிற்கு எடை ஏராளமாக கூடி விட்டது. அதனால் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்ற கிசுகிசு ஒன்று நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால் இது குறித்து இப்போது அனுஷ்காவே மெளனம் கலைத்திருக்கிறார்.
’’பாகுபலி படங்களுக்குப் பிறகு நான் பாகமதி படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அதனால் நடித்து முடித்தேன். அதற்குப் பிறகு எனக்கு ஒரு கட்டாய ஓய்வு தேவைப்பட்டது. அந்த ஓய்வு எனக்கான நேரத்தை கொடுத்தது. மனரீதியாக அந்த ஓய்வு எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு அவசியமான மனநிலையும் இந்த ஓய்வில் கிடைத்தது.
இப்போது உற்சாகமாக இருக்கிறது. அடுத்தடுத்து நல்ல கதைகளில் நடிப்பேன். திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும் கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை தொடர்ந்து படங்களில் நடிக்கவிருக்கிறேன்’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் அனுஷ்கா.
ரஜினி கமல் ட்ரெண்டை மாற்றிய இயக்குநர்கள்!
கோலிவுட்டில் இன்று அதிகம் விவாதிக்கப்படும் மூன்று பெயர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் மற்றும் அட்லீ.
முதலில் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’, ‘அடுத்து நெல்சன் ரஜினி காந்தை வைத்து எடுத்த ‘ஜெயிலர்’, ‘மூன்றவதாக அட்லீ பாலிவுட்டின் ஷாரூக்கான் – நயன்தாரா நடிப்பில் டைரக்ட் செய்த ‘ஜவான்’. இந்த மூன்றுப் படங்களுக்கும் தமிழ் சினிமா வியாபார வட்டத்தில் நல்ல வரவேற்பு.
ஒரே காரணம்தான். இந்த மூன்று இயக்குநர்களும், வயதான சீனியர் ஹீரோக்களை வைத்து பக்காவான கமர்ஷியல் படம் கொடுக்க முடியுமென காட்டிவிட்டார்கள்.
கதை என்று பெரிதாக கவலைப்படாமல், நேரம் போவதே தெரியாமல் இருக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சிகளை வைத்தே படங்களை எடுத்து இருக்கிறார்கள். மேலும், இந்த மூன்று ஹீரோக்களும், இன்றைய இளைதலைமுறை நடிகர்களுடன் போட்டிப் போட்டுகொண்டு பெரிய டூயட்களும் பாடவில்லை. கவர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கவும் இல்லை.
’ஜவான்’ படத்தில் ஷாரூக்கான் மட்டும் அப்பா மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவரை வயதான ஹீரோவாகதான் அட்லீ காட்டியிருப்பார்.
இந்த மூன்றுப்படங்களுமே வசூலில் கல்லா கட்டியிருக்கின்றன. இதை வைத்து சினிமா வியாபார வட்டாரத்தில், ‘சீனியர் ஹீரோக்களை அவர்களது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் பார்ப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதனால் இதே போன்று படங்களை எடுத்தால் எல்லோருக்கும் நல்லது’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
மறுபக்கம் இன்னும் சில ஹீரோக்கள், தங்களது மகள் வயதுடைய ஹீரோயின்களுடன் டூயட் பாடி, ஆடிய படங்கள் தோல்வியடைந்து இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.