இந்தியா – இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையின் நிலையான பொருளாதாரம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளின் உயர் மட்டக் குழுவினரின் சந்திப்பு நடைபெற்றது. இதில், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது இந்தியா – இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) அடிப்படையில், வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிரதமர் கெய்ர் ஸ்டார்மெரின் தலைமையின் கீழ், இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் எனது இங்கிலாந்து பயணத்தின்போது வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றம் வர்த்தக ஒப்பந்தம் (CETA) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான இறக்குமதி செலவு குறையும். இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வர்த்தகம் அதிகரிக்கும். இது நமது தொழில்கள் மற்றும் நுகர்வோருக்குப் பயனளிக்கும்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வணிகக் குழுவுடன் நீங்கள் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது, இந்தியா – இங்கிலாந்து கூட்டாண்மையின் புதிய வீரியத்தின் அடையாளம்.
இந்தியா – இங்கிலாந்து இடையே மிகப் பெரிய வணிகத் தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இன்று, இந்தியா – இங்கிலாந்து தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றம் மற்றும் உலகளாவிய ஃபின்டெக் விழா ஆகியவற்றில் உரையாற்ற உள்ளோம். இவை அனைத்திலும், இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இந்தியாவும் இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள். ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி போன்ற மதிப்புகளில் உள்ள பரஸ்பர நம்பிக்கை, நமது உறவுகளுக்கு அடித்தளமாக உள்ளது. உலகில் ஸ்திரமின்மை நிலவும் தற்போதைய சூழலில், இந்தியா – இங்கிலாந்து இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மை உலகின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக இருந்து வருகிறது.