இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் வெடித்தது. அதாவது ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்தியா அதற்குத் தக்க பதிலடியைக் கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு
இந்தத் தாக்குதலைத் தாங்க முடியாத பாகிஸ்தான் கடந்த மே 10ம் தேதி மோதலை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தது. அதை இந்தியாவும் ஏற்கவே மோதல் முடிவுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக எந்தவொரு தாக்குதலும் இல்லாத நிலையே இருக்கிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருக்கிறார்.
போர் நிறுத்தம் செய்ய மட்டும் இந்தியா சம்மதம் தெரிவித்திருந்தது.. மற்றபடி எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தயாராக இல்லை என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் காஷ்மீர் விவகாரம் மற்றும் சிந்து நதி நீர் விநியோகம் உள்ளிட்ட இருதரப்புப் பிரச்சினைகள் குறித்த விரிவான பேச்சுவார்த்தைக்குப் பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
இந்தியா பாகிஸ்தான் மோதல்
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கவே மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. இந்தச் சூழலில் இரு நாடுகளின் டிஜிஎம்ஓக்கள் மோதலை நிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் வர்த்தகம் ஆகியவை இருதரப்பு நலன் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும் அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியிருந்தார். அதாவது இந்தியா பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றால் அதில் பரஸ்பர நன்மை இருக்க வேண்டும். சலுகைகளைப் பெற்றுக்கொண்டே பயங்கரவாதத்தையும் ஆதரித்தால் அதை ஏற்க முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
என்ன காரணம்
இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைக் கூட இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. அதாவது தீவிரவாதத்திற்கு எதிராக உண்மையான நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் எடுக்காத வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்திருந்தது. இதைக் குறிப்பிட்டே நீரும் ரத்தமும் ஒரே ஆறில் பாய முடியாது எனப் பிரதமர் மோடியும் கூறியிருந்தார்.
சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தானில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அதை இந்தியா நிறுத்தி வைக்கும் என்பதைப் பாகிஸ்தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இனிமேல் சிந்து நதிகளில் இந்தியா தனது தேவையைப் பூர்த்தி செல்ல அணைகளையும் கட்டிக்கொள்ளலாம். இது பாகிஸ்தானுக்குப் பெரிய அடியாகவே பார்க்கப்பட்டது.
வேறு வழியில்லாமலேயே அழைப்பு
இந்த விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் முதலில் உலக வங்கியிடம் முறையிட்டது. இருப்பினும், இதில் தங்களுக்குத் தொடர்பில்லை எனத் தலையிட உலக வங்கி மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே வேறு வழியில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் அழைப்பு விடுத்திருக்கிறார்.