No menu items!

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரயத்தனம் – பிரதமர் மோடி

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரயத்தனம் – பிரதமர் மோடி

வாரணாசியில் 72-வது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதாகவும், 2036 ஒலிம்பிக்கையும் நடத்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கிய (04.01.2025) 72-வது தேசிய வாலிபால் (கைப்பந்து) போட்டியை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர மோடி, “தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் இன்று முதல் வாரணாசியில் தொடங்குகிறது. வீரர்கள் மிகுந்த கடின உழைப்புக்குப் பிறகு இந்த தேசிய போட்டிக்கு வந்துள்ளனர். அவர்களின் முயற்சிகள் வரும் நாட்களில் வாரணாசி மைதானத்தில் வெளிப்படும். நாட்டின் 28 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் ஒன்றுகூடி, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற செய்தியை வழங்கியுள்ளன. வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், அனைத்து வீரர்களையும் வரவேற்று வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வீரர்கள் இப்போது வாரணாசி, நகரத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். வாரணாசி விளையாட்டு ஆர்வலர்களின் நகரம். இங்கு மல்யுத்தம், குத்துச்சண்டை, படகுப் பந்தயங்கள், கபடி ஆகியவை மிகவும் பிரபலமாக உள்ளன. வாரணாசி பல தேசிய அளவிலான வீரர்களை உருவாக்கியுள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், காசி வித்யாபீடம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வீரர்கள் மாநில, தேசிய அளவில் சிறந்து விளங்குகின்றனர்.

கைப்பந்து ஒரு சாதாரண விளையாட்டு அல்ல. ஏனெனில் இது சமமான ஒத்துழைப்புத் தேவைப்படும் விளையாட்டு. பந்தை எப்போதும் உயர்த்தி வைத்திருக்கும் முயற்சியில் உறுதி பிரதிபலிக்கிறது. கைப்பந்து வீரர்கள் குழு மனப்பான்மையுடன் இணைகின்றனர். ஒவ்வொரு வீரரும் ‘அணியே முதன்மையானது’ என்ற மந்திரத்தால் வழிநடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு திறன்களைக் கொண்டிருக்கலாம். என்றாலும், அனைவரும் தங்கள் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார்கள்.

இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கும் கைப்பந்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. எந்த வெற்றியும் தனியாக அடையப்படுவதில்லை. ஒருங்கிணைப்பு, நம்பிக்கை, அணியின் தயார்நிலை ஆகியவற்றைச் சார்ந்தே வெற்றி உள்ளது என்பதை கைப்பந்து விளையாட்டு கற்பிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பங்கும் பொறுப்பும் உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் கடமையை நிறைவேற்றும்போதுதான் வெற்றி கிடைக்கும்.

அதேபோல், தூய்மை இந்தியா, டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கி வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இயக்கம் வரை, ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு மாநிலமும் கூட்டு உணர்வுடன் இந்தியாவே முதன்மையானது என்ற உணர்வோடு செயல்படும் வகையில் தேசமும் அந்த வழியில் முன்னேறி வருகிறது.

இன்று உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும் பொருளாதாரத்தையும் பாராட்டி வருகிறது. இந்த முன்னேற்றம் பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் பிரதிபலிக்கிறது. 2014-ம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டுகளில் இந்தியாவின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இளம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதைக் காண்பதில் நாடு பெருமை கொள்கிறது.

அரசும் சமூகமும் விளையாட்டு மீது அலட்சியமாக இருந்த ஒரு காலம் இருந்தது. இது வீரர்களிடையே அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. மிகச் சில இளைஞர்களே விளையாட்டை ஒரு தொழில் முறை அம்சமாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில், விளையாட்டு குறித்து அரசின் மனநிலையிலும் சமூகத்தின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு கணிசமாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நிலையிலும் வீரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நாட்டில் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. விளையாட்டுத் துறையும் அவற்றில் ஒன்று. தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம், கேலோ பாரத் கொள்கை -2025 உள்ளிட்ட விளையாட்டுத் துறை சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இது சரியான திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதுடன், விளையாட்டு அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், நிதி உதவி வழிமுறைகள், இளம் விளையாட்டு வீரர்களுக்கு உலகளாவிய பயிற்சியை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முயற்சிகளுடன், ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டம் போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் விளையாட்டு சூழல் அமைப்பை மாற்றி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். 2036 ஒலிம்பிக்கை நடத்த நாடு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தேசிய நிலைக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...