No menu items!

INDIA Alliance குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி

INDIA Alliance குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்தப் பதவிக்கு செப். 9-ல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ் ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை ஏகமனதாக தேர்வு செய்ய பாஜக தலைமை தீவிர முயற்சி செய்தது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு கோரினார். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. கடந்த 17-ம் தேதி என்டிஏ கூட்டணி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இண்டியா கூட்டணி தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

திமுக தரப்பில் திருச்சி சிவா, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட தாகக் கூறப்படுகிறது. அதேபோல, மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், திட்ட கமிஷன் முன்னாள் தலைவர் பால்சந்திர முங்கேசர் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும், அவர் அரசியல் கட்சிகளை சாராதவராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்நிலையில், இண்டியா கூட்டணியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. கனிமொழி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுவார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன. இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகும். அரசியலமைப்பு சட்டம் ஆபத்தில் இருக்கும்போது, அதைக் காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்து போராடுகிறோம். இந்த தேர்தலில் நாட்டுக்கு நல்ல பணிகளை செய்யக்கூடிய வேட்பாளர் தேவை என்று முடிவு செய்தோம்.

இதன்படி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் அவரும் ஒருவர். ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் திறம்படப் பணியாற்றி உள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் என்பது ஒரு சித்தாந்த போர். இதன் காரணமாகவே நீதிபதி சுதர்சன் ரெட்டியை பொது வேட்பாளராக அறிவித்துள்ளோம். வரும் 21-ம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்வார். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி கூறும்போது, “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட உள்ளேன். எனக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆளும் என்டிஏ கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்” என்றார். தெலங்கானாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது, ஆந்திரா, தெலங்கானாவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆந்திராவின் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், ஜன சேனாவிடம் அவர் ஆதரவு கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளன. மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பிஆர்எஸ் கட்சியின் ஆதரவையும் அவர் கோரியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஆகுலமல்லாவரத்தில் 1946-ல் பிறந்த சுதர்சன் ரெட்டி, 1971-ல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தார்.1995-ல் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 2005-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 2013-ல் கோவா மாநில லோக்யுக்தாவில் பணியாற்றினார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 7 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...