இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் 60 லட்சம் ருபாயை கொடுத்திருக்கிறார்கள். முதன் முறையாக இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளிவந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இளையராஜா வேறு படங்களுக்கு இசையமைத்த பாடல்களை பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் பயன்படுத்தி வந்தனர். படத்தின் ஹீரோ ஹீரோயின் காதலுக்கும், சோகத்திற்கும் உணர்வுகளை வெளிப்படுத்த இந்த பாடல்கள் உதவி செய்தன. ஒரு கட்டத்தில் பல படங்களில் பல பாடல்கள் இப்படி பயன்படுத்தப்பட்டன.
அதனை ஒரு முடிவுக்கு கொண்டுவர இளையராஜா தன்னிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் இனிமேல் தன் பாடல்களை படங்களில் பயன்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதோடு தன் பாடல்களை விற்பனை செய்ய உரிமை கொடுத்த எக்கோ நிறுவனம் மீதும் வழக்கு தொடுத்து அது தொடர்ந்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த 60 லட்சம் என்பது ஒரு பாடலுக்கு மட்டும் என்றால் இளையராஜாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. பொதுவாக 1980களில் திரைக்கலிஞர்களின் சம்பளம் என்பது அதிகபட்சமாக 20 லட்சம் 30 லட்சமாகத்தான் இருந்து வந்தது. அதிலிருந்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் எவ்வளவாக இருந்திருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.
ஆனால் அன்றைய தங்கத்தின் மதிப்பை வைத்துப் பார்த்தால் அது அன்றைக்கு அதிகபட்சமான சம்பளமாகத்தான் இருந்திருக்கும். அதேசமயம் ஒரு பாடலை தங்கள் படத்தில் பயன்படுத்தும்போது, அதன் மூலம் அந்தப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், லாபமும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப்பார்த்தால் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் குணா படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் படமு முழுவதிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
படத்திற்கு பாடல் உயிர் நாடிபோல் அமைந்து விட்டது என்றே சொல்லலாம். படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்று சில நூறு கோடிகளை வசூலில் அள்ளியது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஒரு பாடலுக்கான உரிமைத்தொகையை தற்போது பெறப்பட்டிருக்கிறது.
இனிமேல் இதே போன்ற நடமுறையைத்தான் பாடல் உரிமை விஷயத்தில் இளையராஜா கடைபிடிக்க இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் அனுமதி இல்லாமல் அவர் பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது குறைய ஆரம்பிக்கும். தேவைப்படுவோர் தங்களுக்கான பாடலை உரிய தொகை மூலம் பெறுவார்கள்.
இன்று வரும் இளைய இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு இசையமைப்பதென்றால் பல கோடிகளை பெறுகிறார்கள். பாடல்கள் பெரும்பாலும் திரைப்படம் வந்த சில நாட்கள் வரைமட்டுமே புகழுடன் பேசப்படும் நிலை இருந்து வருகிறது.