No menu items!

அந்த ஆளை சும்மா விட மாட்டேன்! – அமைச்சர் அன்பில் மகேஷ்

அந்த ஆளை சும்மா விட மாட்டேன்! – அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளியில் ஆன்மிகச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்ட சொற்பொழிவு விவகாரத்தில் அசோக் நகர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றியுள்ளார். ஆன்மிகம் தொடர்பாக பேசிய அவர், “நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன்” என்றெல்லாம் அவர் பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது, “ஒரு சிலர் கண் இல்லாம பொறக்குறாங்க, வீடில்லாம பொறக்குறாங்க, பல நோய்களோட பொறக்குறாங்க.. இறைவன் கருணையானவர் என்றால் எல்லோரையும் ஒரே மாதிரி படைத்திருக்க வேண்டியது தானே ஏன் படைக்கவில்லை? ஒருத்தன் கோடீஸ்வரனா இருக்கான், ஒருத்தன் ஏழையா இருக்கான்.. ஒருத்தன் இப்படி இருக்கான்.. ஒருத்தன் அப்படி இருக்கான்.. ஒருத்தன் கிரிமினலா இருக்கான் ஒருத்தன் நல்லவனா இருக்கான்.. ஒருத்தன் ஹீரோவா இருக்கான் ஒருத்தன் ஹீரோ மாதிரி இருக்கான். ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்க என்ன செஞ்சீங்களோ அதைப் பொறுத்துதான் இந்த ஜென்மம் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

கடும் எதிர்ப்பு

அரசுப் பள்ளியில் அவர் ஆன்மிகம் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீதும், பேசுவதற்கு அனுமதி அளித்த கல்வி நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இவ்விஷயத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தானர். இந்த பேச்சைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக எஸ்.எப்.ஐ அமைப்பு அறிவித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அசோக் நகர் அரசுப் பள்ளி பல சாதனைகளை முன்னெடுத்த பள்ளி, இங்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, கண்டிக்கக்கூடியது. ஒவ்வொரு மாதமும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் இது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. பள்ளி நிகழ்ச்சிகளுக்கு அறிவு சார்ந்தவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு யாரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டும். ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச புரிதல் வேண்டும்; இதை வேண்டுகோளாகவும் வைக்கிறேன் எச்சரிக்கையாகவும் சொல்கிறேன்.

4 நாட்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியரா? உயரதிகாரிகளா? யார் காரணம் என்பது விசாரிக்கப்பட்டு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில் உங்களுக்கு இருக்கும் அதே உணர்வுதான் முதல்-அமைச்சருக்கும், பள்ளிகல்வித்துறைக்கும் உள்ளது.

என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்கு வந்து, என் ஆசிரியர் சங்கரை அவமானப்படுத்தி பேசிய மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்; கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற்போக்கு பேச்சை எதிர்த்து தமிழ் ஆசிரியர் சங்கர் கேள்வி கேட்டது பெருமையாக உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் என்னை பார்க்கின்றனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். அதற்காக நான் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளேன் என்பது தவறான செய்தி

எவ்விதத்திலும் கொள்கையில் சமரசம் என்பது இல்லை. புதிய கல்விக்கொள்கையை கூட நாங்கள் அதற்காக ஏற்கவில்லை. தன்னம்பிக்கை பேச்சாளரை மாணவர்களிடம் பேச வைக்கும் ஆசிரியர்களின் முயற்சியில் தவறு இல்லை. ஆனால், அவர்களின் பின்னணியை சோதிக்காமல், என்ன மாதிரி பேசப்போகிறார் என்பதை தெரிந்தே அழைத்து வந்திருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது. நல்ல மதிப்பெண் பெறுவது புத்திசாலித்தனம் இல்லை, பகுத்தறிந்து செயல்படுவதே புத்திசாலித்தனம். பிற்போக்கு சிந்தனை உடைய கருத்துக்களை யாராவது கூறினால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும். பகுத்தறிவை விதைக்கும் இடம் பள்ளி.

விநாயகர் சதுர்த்தி விவகாரம்

விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை விவகாரத்தில், சுற்றுச்சூழல் இணை செயலாளர் கொடுத்த சுற்றறிக்கை மூலமாக மாவட்ட ஆட்சியரும் அதன் அடிப்படையில் சி.இ.ஓ பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கின்றார். இது குறித்து தலைமைச் செயலரிடம் அறிவுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கச் சொல்லி இருக்கின்றேன். இது விநாயகர் சிலையை கரைக்க வேண்டியவர்களுக்கு கொடுக்க வேண்டிய சுற்றறிக்கை, அதை ஏன் பள்ளிகளுக்கு கொடுத்தார்கள் என்பது குறித்து கேட்டுள்ளேன்” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் கருத்து

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை

இந்நிலையில் சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...