தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அவர் தனது மனைவியை பிரிந்து விட்டதாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில நாட்கள் கழித்து சமீபத்தில் ஊடகத்தினருடன் சந்தித்துப் பேசினார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தையும் இருக்கிறது. இந்த ஜோடி கடந்த 15 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், ஜெயம் ரவியிடமிருந்து இப்படியொரு விவாகரத்து கடிதம் வெளியாகியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. ஆனால், இது பற்றி மீடியாக்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தாலும் இரு தரப்பும் மவுனம் காத்து வந்தனர். இந்த நிலையில்தான் ரவி மீடியாக்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
கடினமாக உழைத்து இத்தனை ஆண்டுகளாக நான் சேர்த்த பெயரையும் புகழையும் டேமேஜ் செய்ய நினைக்கிறார்கள். அவ்வளவு எளிதில் அதை நடக்க விட மாட்டேன். நான் என்னுடைய வக்கீல் மூலம் ஆர்த்தியின் தந்தையிடம் பேசிய பின்னர் தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு முன்னரே ஆர்த்தியின் பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் கலந்து ஆலோசித்தனர். அப்படி இருக்கும்போது எப்படி எதுவுமே எனக்கு தெரியாது என ஆர்த்தி சொல்கிறார் என தெரியவில்லை.
ஜூன் மாதம் என்னுடைய மகன் ஆரவ்வின் பிறந்தநாள் வந்தது. அப்போது நான் சென்னையில் தான் இருந்தேன். அவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளிவந்தன. என்னுடைய காரை வேறு ஊரில் பார்த்ததாக சொல்கிறார்கள். நான் எனது காரை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்வேன். அதற்காக தான் நான் கார் வாங்கி இருக்கிறேன். அது என்னுடைய சொந்த உழைப்பில் நான் வாங்கிய கார், அதை எங்கு வேணாலும் எடுத்து செல்ல எனக்கு உரிமை இருக்கு.
விவாகரத்து பற்றி என்னுடைய மூத்த மகன் ஆரவிடம் மட்டும் கூறினேன். இளைய மகன் அயான் மிகவும் சின்ன பையன் என்பதால் அவனிடம் இதுபற்றி பேசவில்லை. ஆரவ் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் சொன்னான். அதற்காக சூழல் இல்லை என்பதை அவனிடம் எடுத்துக் கூறினேன்.
நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன்.