இசைஞானி இளையராஜா வேலியன்ட் (valiant) என்ற தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை வரும் 8ஆம் தேதி லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றம் செய்கிறார். இதற்காக இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
அனைவருக்கும் வணக்கம். இந்தப் புதிய சிம்போனியை வெளியிடுவதற்காக லண்டன் செல்கிறேன்.
உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவினர் வாசித்து, ரசிகர்கள் கேட்டு மகிழ்ந்து, இந்த இசையை 8-ம் தேதி வெளியிட இருக்கிறோம். அப்பல்லோ அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
வந்துள்ள ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழராக உணர்கிறேன் என்பதை விட மனிதராக உணர்கிறேன். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. Incredible இந்தியா மாதிரி, நான் Incredible இளையராஜா
இவ்வாறு இளையராஜா கூறினார்.
இசையமைப்பாளர் தேவா தனது பாடல்களுக்கு காப்பி ரைட் வேண்டாம் என கூறிவிட்டாரே என்ற கேள்வி இளையராஜாவிடம் கேட்க்கப்பட்டது. அதற்கு அவர், “அனாவசியமான கேள்வி என்னிடம் கேட்க கூடாது” என்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கூறியதாவது…
அப்பாவோட இசையில நம்ம தமிழ் மக்கள் உருகியிருக்காங்க. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஊருக்குப் போய் அங்கேயே டேக்கா காண்பிக்கிற மாதிரி, நம்ம ஊர் ஆள் அங்க சிம்பொனி அரங்கேற்றுவது தமிழனாக ரொம்பப் பெருமையாக இருக்கு.
இன்றைக்கு நம்ம தமிழ் இசை உலகமெல்லாம் பிரபலமாகியிருக்கு. நானும் எல்லார்மாதிரியும் சராசரியான இளையராஜா ரசிகன்தான். சிம்பொனி என்பது மெற்கத்தியர்களின் பாரம்பரிய இசை. அதை மொஸார்ட், பீத்தோவன் போன்றவர்கள் ரொம்ப நுணுக்கமாகப் பண்ணியிருக்காங்க.
அந்த மாதிரி நம்மளும் சிம்பொனியை அரங்கேற்றனும்னு அப்பாவுக்கு ரொம்ப நாள் ஆசை. நம்ம இளையராஜா சிம்பொனி அரங்கேற்றுவதை தமிழ் மக்களும் அந்த அரங்கில் நிறைந்து கேட்கனும்னு எனக்கு ஆசை. நிச்சயமாக அதை இங்கையும் அவர் வாசிப்பார். அதை நம்ம கேட்போம். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.