காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவில் இருந்து பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை தொடரும் நிலையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசர கால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.12) காலை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிஐ ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ., செங்கல்பட்டில் 1.06 செ,மீ., திருவள்ளூரில் 0.6 செ,மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கிறது.
முதல்வரின் உத்தரவின்படி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம்.
1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் ( Jet Rodding ) இயந்திரங்களும் தயாராக உள்ளன. இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல, முந்தைய அக்டோபர் மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 22,000 நபர்கள் பணியில் இருக்கின்றனர். மழைநீர் சேகரிப்பிற்காகதான், மழைநீர் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
ரெட் அலர்ட் வாய்ப்பு உண்டு
அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்தில் மழை பொழிவு எப்படி இருக்கும் என்று கணித்துள்ள தனியார் வானிலை ஆய்வாளர் செல்வ குமார், “நவம்பர் 13-ம் தேதி (நாளை) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெவ்வேறு நேரங்களில் மழை முதல் கனமழை வரை பொழியும்.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மிக கனமழை பொழியும். அதே நேரத்தில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலும் பொழியும்.
14,15,16 ஆகிய தேதிகளில் அரபிக்கடலில் கடந்து சென்ற காற்று சுழற்சி நீடிக்கும் அதே நாளில் வங்கக்கடலில் தமிழ்நாடு கரையை மேலும் ஒரு சுழற்சி நெருங்கி நீடித்து, கடந்து தமிழநாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை வரை பொழியும். ஆங்காங்கே மிக கன மழை பொழியும். ஒரு சில இடங்களில் அதி கன மழை 20 செமீ வரை கூட எட்டலாம். இதே மழை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பகுதிகளிலும் பொழியும். நவம்பர் 13,14,15,16 தேதிகளின் சில நாள்கள் இந்தியா வானிலை நிறுவனம் Red Alert கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஒருசில இடங்களில் எதிர்பார்க்கும் மிக கன மழைக்கான Red Alert ஆக இருக்கும். அச்சம் வேண்டாம். பரவலாக நல்ல மழை பொழியும்.