பிரதமர் அலுவலகம் சரக்கு மற்றும் சேவை வரி (GST) கட்டமைப்பை மாற்றியமைக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, முதல்முறை தற்போது மிகப்பெரிய மாற்றங்களைச் சந்திக்கவுள்ளது. ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிதாக்குவது மற்றும் வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பது ஆகிய நோக்கங்களுடன், நிதி அமைச்சகம் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரி விகிதங்களில் மாற்றங்கள் மற்றும் நடைமுறைகளை எளிதாக்குதல் போன்ற திட்டங்களும் இதில் அடங்கும்.
வரி விகிதங்களை சீரமைக்க ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை..
வரி அடுக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம். தற்போது, ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5%, 12%, 18% மற்றும் 28% என ஐந்து முக்கிய வரி விகிதங்கள் உள்ளன. தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களுக்கு 0.25% மற்றும் 3% என்ற சிறப்பு விகிதங்களும் உள்ளன.
தற்போதுள்ள 5% வரி விதிப்பில் சுமார் 21% பொருட்களும், 12% வரி விதிப்பில் 19% பொருட்களும், 18% வரி விதிப்பில் 44% பொருட்களும் உள்ளன. அதிகபட்சமாக 28% வரி விதிப்பில் 3% பொருட்கள் மட்டுமே உள்ளன.
இதில்தான் மாற்றத்தை செய்ய உள்ளனர். அதன்படி 12% வரி விதிப்பை நீக்குவது தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, 12% வரி விதிப்பில் உள்ள பொருட்கள், அவற்றின் தன்மைக்கு ஏற்ப 5% அல்லது 18% வரி விதிப்பிற்கு மாற்றப்படலாம். இதன் மூலம் ஜிஎஸ்டி முறையை எளிதாகப் புரிந்து கொள்ளவும், நிர்வகிக்கவும் முடியும். இதனால் பல பொருட்களின் விலை அடியோடு மாறும்.
வரவிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு (FTAs) பொருளாதாரத்தை தயார்படுத்துவதற்கான ஒரு பகுதியாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை சரிசெய்யுமாறு அரசாங்கத்தை தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான சுமையை குறைக்க ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த சீர்திருத்தங்கள் இலக்கு வைத்துள்ளன.
28% வரி விதிப்பில் உள்ள சிகரெட், மென்பானங்கள் மற்றும் பெரிய கார்கள் போன்ற சில பொருட்களுக்கு இழப்பீட்டு வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 2022 வரை ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. இருப்பினும், கோவிட் காலத்தில், மாநிலங்கள் சார்பாக ரூ.2.69 லட்சம் கோடியை மத்திய அரசு கடன் வாங்க வேண்டியிருந்தது. இதை திருப்பிச் செலுத்த, இழப்பீட்டு வரி மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு வரி நிதியில் உள்ள உபரியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தனி அமைச்சர்கள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு, ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான இறுதி முன்மொழிவு ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி கவுன்சிலில் சமர்ப்பிக்கப்படும்.