தொழில் முறை டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் ரோஜர் ஃபெடரர்.
நேற்றிரவு லேவர் கோப்பைக்காக நடாலுடன் இணைந்து அவர் ஆடிய இரட்டையர் ஆட்டம்தான் அவர் ஆடிய கடைசி தொழில் முறை டென்னிஸ்.
தனது கடைசி டென்னிஸ் போட்டியாக லேவர் கோப்பையை ஃபெடரர் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கிறது. லேவர் கோப்பை ஐரோப்பிய டென்னிஸ் ஆட்டக்காரர்கள் அணிக்கும் உலக அணிக்கும் இடையே நடக்கும் போட்டி. இந்தப் போட்டியில் உலகின் தலைச்சிறந்த ஆட்டக்காரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். ஒரே இடத்தில் குழுமி இருப்பார்கள். ஐரோப்பிய அணியில் ஃபெடரர், நடால், ஜோகோவிச் என முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒரு அணியில் இருந்தார்கள். வேறு கோப்பைகளில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடினாலும் இந்தக் கோப்பையில் ஐரோப்பிய அணிக்காக ஒன்றாக விளையாடுவார்கள். தான் ஓய்வு பெறும்போது தன்னுடன் டென்னிஸ் உலகின் சிறந்த வீரர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஃபெடரர் விரும்பினார். அதுதான் நேற்றிரவு நடந்தது.
நடாலும் ஃபெடரருடன் இணைந்து ஆடிய இரட்டையர் போட்டியில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். ஃபெடரரின் கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனால் அது முக்கியமல்ல. ஃபெடரருக்காக நடால் கண்ணீர் விட்டதும் ஜோகோவிச் பேசியதும் ஃபெடரரின் மனைவியும் பிள்ளைகளும் கண்ணீருடன் ஃபெடரரை கட்டியணைத்துக் கொண்டது எல்லாம்தான் முக்கியமான காட்சிகள். வரலாற்றின் பதிவுகள். பல போட்டிகளில் ஃபெடரருக்கு எதிராக தீவிரமாக விளையாடிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஃபெடரரை கட்டியணைத்து விடைகொடுத்தார்கள்.
7வயதில் டென்னிஸ் மட்டையைப் பிடித்து 14 வயதில் ஜூனியர் டென்னிஸ் போட்டிகளில் நுழைந்து 17 வயதில் ஜூனியர் விம்பிள்டன் கோப்பையை வென்று 21 வயதில் விம்பிள்டன் சீனியர் கோப்பைய முதல் முறை வென்று 22 வயதில் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரராக உயர்ந்து உலகெங்கும் ரசிகர்களை ஈர்த்து இப்போது 41வது வயதில் டென்னிஸிலிருந்து விடைபெறுகிறார் ரோஜர் ஃபெடரர். அசாத்திய சாதனையாளர். அசைக்க முடியாத வெற்றியாளர்.
20 கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை முதலில் வென்றவர்… 6 முறை வருடத்தின் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்று வரை முன்னேறியது…2004 பிப்ரவரி முதல் 2008 ஆகஸ்ட் வரை தொடர்ந்து 237 வாரங்கள் உலகின் நம்பர் ஓன் டென்னிஸ் வீரராக இருந்தது…36வது வயதிலும் நம்பர் ஒன் நிலைக்கு உயர்ந்தது….விம்பிள்டன் கோப்பையை எட்டு முறை வென்றது….இப்படி ஃபெடரரின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அவருடைய ஓட்டு மொத்த சீனியர் டென்னிஸ் வாழ்க்கையில் 1526 போட்டிகள் விளையாடியிருக்கிறார். அவற்றில் 1251 போட்டிகளில் வென்றிருக்கிறார். அதாவது அவரது வெற்றி எண்ணிக்கை 82 சதவீதம். இது எந்த டென்னிஸ் ஆட்டக்காரரும் எட்டாத சாதனை.
இந்த ஆச்சர்ய ஆட்டக்காரர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஸ்விட்சர்லாந்தில். சிறு வயதிலேயே டென்னிஸ் ஆர்வம் வர, மட்டையைத் தூக்கியவர் இப்போதுதான் ஓய்வுக்கு முன் வந்திருக்கிறார்.
இத்தனை வெற்றி எப்படி ஃபெடரருக்கு சாத்தியமானது?
விளையாடத் தொடங்கிய காலக் கட்டத்தில் ஃபெடரரின் முதல் போட்டியில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்திருக்கிறது. ஆனால் அந்தப் போட்டியில் தோற்றுவிட்டார். அதுவும் 6.0, 6.0 என்று கேவலமாக.
“என் தோல்வியைப் பார்த்ததும் உள்ளூர் டென்னிஸ் சங்கத்தினர் என் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இந்தப் பையன் நாம் நினைத்த அளவு திறமைசாலி இல்லை என்று கூறி விட்டார்கள். ஆனால் நம்பிக்கை இழக்கவில்லை. தொடர்ந்து விளையாடினேன்” என்று மிகச் சிறு வயது நினைவுகளைக் குறிப்பிடுகிறார் ஃபெடரர். அவர் தொடர்ந்து விளையாடியது வீணாகப் போகவில்லை. 12 வயதில் ஸ்விஸ் நாட்டு ஜூனியர் சாம்பியன் ஆனார்.
”என்னுடைய டென்னிஸ் பயணத்தில் 14 வயது 16 வயது வரையிலான காலக்கட்டம்தான் முக்கியமானது. அப்போதுதான் வீட்டிலிருந்து பிரிந்து தனியே டென்னிஸ் போட்டிகளுக்கு செல்லத் துவங்கினேன். நானே முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது. எனது பயிற்சியாளர் பீட்டர் கார்டர் உதவினாலும் தன்னிச்சையாக செயல்பட்ட அந்த ஆரம்ப இரண்டு வருடங்கள் ரொம்ப முக்கியமானவை” என்கிறார் ஃபெடரர்.
நம்பிக்கை. இதுதான் ரோஜர் ஃபெடரருக்கு ஆரம்பக் காலத்திலிருந்து இப்போது வரை துணையாக இருந்திருக்கிறது. அவர் எந்தக் காலக் கட்டத்திலும் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கைதான் அவர் 36 வயதிலும் விம்பிள்டன் கோப்பையை வெல்ல முடிந்தது. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால் 2013லிருந்து 2016 வரை – சுமார் 4 வருடங்கள் – அவரால் எந்தப் பெரிய போட்டியிலும் வெல்ல முடியவில்லை. ஆனாலும் தன்னால் விம்பிள்டனை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை. நான்கு வருடங்கள் கோப்பைகளை வெல்ல இயலாத ஃபெடரர் 2017ல் விம்பிள்டன் கோப்பையை வென்றார். அதன்பிறகு 2018ல் ஆஸ்திரேலியன் கோப்பையை வென்றார்.
வெறும் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதுமா வெற்றி பெறுவதற்கு? இல்லை, ஃபெடரரிடம் அதற்கான உழைப்பு இருந்தது. தினமும் 4 மணி நேரம் டென்னிஸ் பயிற்சி, பிறகு ஜிம்மில் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி என பயிற்சிகளை ஃபெடரர் பயிற்சிகளை விட்டதே இல்லை. இந்தப் பயிற்சிகள்தான் அவர் இத்தனை ஆண்டுகள் அவர் டென்னிஸில் நீடித்ததற்கு காரணம்.
டென்னிஸ் ஆடத் துவங்கிய ஆரம்ப நாட்களில் ஃபெடரரி மிகவும் கோபக்காரராக உணர்ச்சிவசப்படுபவராக இருந்திருக்கிறார். ஆனால் இப்படி உணர்ச்சிவசப்படுவது வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து சீனியர் ஆட்டத்துக்குள் நுழைந்தபோது தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி உணர்ச்சிகளை அடக்கி அமைதியான ஆட்டக்காரர் என்று பெயரெடுத்திருக்கிறார். அவருடைய ஆட்டக் காலத்தில் ஒரு முறைகூட டென்னிஸ் ராக்கெட்டை தூக்கி வீசியதோ உடைத்ததோ கிடையாது. ”மிகவும் கஷ்டப்பட்டுதான் உணர்ச்சிகளை அடக்க பழகினேன். எது நடந்தாலும் பாசிடிவாக இருப்பதுதான் வெற்றியைத் தரும் என்று உணர்ந்தேன்” என்று ஃபெடரர் குறிப்பிடுகிறார். அவருடைய தாரக மந்திரம் பி பாசிடிவ்.
தோல்விகள் வரும்போது அழுத்தங்கள் கூடும். முக்கியமாய் ஃபெடரர் போன்ற உலகறிந்த ஆட்டக்காரர்களுக்கு இந்த அழுத்தம் கூடுதலாக இருக்கும். இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டால்..அவ்வளவுதான்… என்று முடிவுகட்டும் உலகம் இது. ஆட்டக்காரர்களுக்கு தோல்விகள் கூடுதல் அழுத்தத்தைத் தரும்.
”தோல்விகளை நினைத்து கவலைப்படக் கூடாது. இதற்கு முன்பு நான் சாதித்தவற்றை நினைத்துப் பார்ப்பேன். அதுவே நல்ல நம்பிக்கை தரும். அதிக உயரங்களை எட்ட முயற்சிக்க மாட்டேன். அவை தேவையில்லாத அழுத்தங்களை தரும்” என்கிறார் ஃபெடரர்.
ஃபெடரரின் வெற்றி ஃபார்முலாக்கள் டென்னிஸ்க்கு மட்டுமல்ல, எல்லோருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்.