திருவண்ணாமலை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் என்ற கனிமமும் தமிழ்நாட்டில் பூமிக்கு அடியில் படிமங்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
அந்த செய்தியில், “இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசும் போது, நாடு முழுவதும் உள்ள கனிம வளங்கள் குறித்து புவியியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார். “அந்த ஆய்வின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலத்துக்கு அடியில் சுண்ணாம்புக் கற்கள் அதிகம் உள்ளன. திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, பேட்டரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் லித்தியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. அது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்” என்று அவர் பேசினார்.
மேலும், பூமிக்கு அடியில் நில அதிர்வுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்றும் அவை உணரப்படும் அளவுக்கு இல்லாதவரை பாதிப்பில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.