தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 96.44 சதவீதம் பேரும், மாணவர்களில் 92.37 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்துக்கு முதலிடம்
தமிழக மாவட்டங்களில் அதிக மாணவர்கள் தேர்ச்சியடைந்த மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23,849 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 23,252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் சதவீதம் 97.45.
திருப்பூருக்கு அடுத்த இடத்தை சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%), விருதுநகர் (96.64%) ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளன. மாநிலத்திலேயே மிகக் குறைவாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 91.32 சதவீதம் தேர்ச்சி
பள்ளிகளைப் பொறுத்தவரை அர்சுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 91.32 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம் பேரும், தனியார் பள்ளிகளில் 96.7 சதவீதம் பேரும் தேச்சி அடைந்துள்ளனர். 397 அரசுப் பள்ளிகளும், 2,478 தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியைக் கண்டுள்ளன.
நூற்றுக்கு நூறு
தேர்வு எழுதிய மாணவர்களில் 26,352 பேர் ஏதாவது ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். தமிழ் மொழிப் பாடத்தில் 35 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 7 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வணிகவியலில் 6,142 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2,587 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வு முடிவு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொறியியல் விண்ணப்ப பதிவு தொடங்கியது
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. இன்று (மே 6) முதல் ஜூன் 6 வரை https://www.tneaonline.org என்ற முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவு செய்யலாம். பொறியியல் படிப்பு விண்ணப்பங்களுக்கான சான்றிதழ்களை ஜூன் 12 வரை அப்லோடு செய்யலாம். மேலும், ஜூலை 12ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் நம்பர் வெளியிடப்படும் என்றும், ஜூலை 13 முதல் 30 வரை சான்றிதழ் சரி பார்ப்பு பணிகள் நடைபெறும்.