தங்களுக்கு பிடிக்காத தலைவர்களுக்கு எதிராக கோஷம் போடுவது, கறுப்புக் கொடி காட்டுவது, அவர்கள் கொடும்பாவியை எரிப்பது அந்த கால அரசியலில் முக்கிய போராட்டங்களாக இருந்தன. ஆனால் இப்போதைய சோஷியல் மீடியா காலத்தில் அதெல்லாம் மாறிவிட்டது. எக்ஸ் தளத்தில் ஹாஷ்டாக் போட்டு கமெண்ட்களை பதிவிடுவது புதிய ஸ்டைல் போராட்டமாக மாறி இருக்கு. அப்படி ஒரு போராட்டத்தைதான் இன்றைக்கு நாம் நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே எழுந்த வார்த்தைப் போர்தான் இந்த ஹாஷ்டாக் யுத்தத்துக்கு காரணம்.
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் ஒதுக்காமல் உள்ளது.
இந்த நிதியை ஒதுக்கச் சொல்லி தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு மும்மொழி கொள்கை மற்றும் இந்தியை புகுத்த முயற்சிப்பதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழலில் தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து 19-ம் தேதி கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சரியான ஆளாக இருந்தால், அவர் வாயில் இருந்து ‘Get out Modi’ என்று சொல்லட்டும். உதயநிதி வீட்டுக்கு வெளியே, பாலிடாயில் பாபு என்று போஸ்டர் ஒட்டிவிட்டு வருவேன்” ன்னு பேசினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இந்த விஷயத்தை லேஸில் விடவில்லை. அண்ணாமலை பேசினதைப் பத்தி செய்தியாளர்கள் கேட்டதுக்கு “சுவரொட்டி ஒட்டறதெல்லாம் ஒரு பெரிய சாதனையா? மத்திய அரசுகிட்ட கேட்ட நிதியை வாங்கித் தர்றதுக்கு துப்பில்லை. இவர்கள் சவால் விடுகிறார்கள். அண்ணாமலை பிரச்சினையை திசைத்திருப்ப பார்க்கிறார். அவரை வரச் சொல்லுங்கள். இன்று இளைஞரணி நிகழ்ச்சி இருக்கிறது. அது முடிந்தவுடன் வீட்டில்தான் இருப்பேன். ஏற்கெனவே அண்ணாமலை அறிவாலயம் பக்கம் ஏதோ செய்வதாக கூறியிருந்தார். முடிந்தால் அவரை அண்ணா சாலை பக்கம் வரச்சொல்லுங்கள், தைரியம் இருந்தால்,” ன்னு சொன்னார்.
அண்ணாமலையும் விடாம “அண்ணா சாலைக்கு நான் வருகிறேன். நீங்கள் இடத்தை மட்டும் முடிவு செய்யுங்கள். நான் தனி ஆளாக வருகிறேன். பாஜக தொண்டர்கள் யாரும் என்னுடம் வரமாட்டார்கள். நீங்கள் திமுகவின் மொத்த படையையும், மொத்த காவல் துறையையும் வைத்து தடுத்து நிறுத்திப் பாருங்கள். நேற்று நான் பேசியதில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை” ன்னு சொல்லியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினை அண்ணாமலை வம்புக்கு இழுத்ததால கோபமான திமுகவினர் நேற்று எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ ங்கிற ஹாஷ்டாக்கை டிரென்டிங் செய்தாங்க. இதனால கோபமான அண்ணாமலை, “திமுக ஐ.டி. விங் மற்றும் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி, எக்ஸ் தளத்தில் ‘கெட்-அவுட் மோடி’ என்று டிரென்டிங் செய்துள்ளனர். ஸ்டாலின் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என ‘கெட்-அவுட் ஸ்டாலின்’ என எக்ஸ் தளத்தில் பதிவிடப்போகிறோம். யார் அதிகமாக டிரென்டிங் செய்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்”ன்னு சொல்லி இருந்தார். இன்னைக்கு காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின்ங்கிற ஹாஷ்டாக்கை பதிவிடப் போறதாவும் அவர் சொல்லி இருந்தார்.
நேற்று தான் சொன்னபடியே இன்று காலையில் கெட் அவுட் ஸ்டாலின் ஹாஷ்டாக்கை அவர் பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பான பதிவில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகலிடமாக மாற்றியது, கடனாளி மாநிலமாக்கியது, சிதிலமடைந்த கல்வித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து பிரிவினைவாத அரசியல் செய்வது, மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என்றிருக்கும் திமுக அரசை மக்கள் விரைவில் அப்புறப்படுத்துவார்கள்.” ன்னு குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்னைக்கு காலையில இருந்து கெட் அவுட் ஸ்டாலின் ஹாஷ்டாக்கும், கெட் அவுட் மோடி ஹாஷ்டாக்கும் எக்ஸ் பக்கத்துல வேகமா ட்ரெண்டிங் ஆகிட்டு இருக்கு.