“உன்னைப்போன்ற பெண் எனது வாழ்க்கையில் இணைவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று சோஷியல் மீடியாவில் கெளதம் கார்த்திக் ஒரு ஸ்டேட்டஸை தட்டிவிட அப்பொழுதே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அடுத்த விநாடியே கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் கோலிவுட்டின் சமூக அக்கறையுள்ள செய்தியாக மாறியது.
யார் இந்த மஞ்சிமா மோகன்?
மலையாள சினிமாவில் 1997-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். பின்னர் சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த அவர், 2015-ம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆரம்பத்தில் மலையாளப் படங்களில் மட்டும் நாயகியாக நடித்த மஞ்சிமா, பின்னர் ‘அச்சம் என்பது மடமையடா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
’’தேவராட்டம்’ படத்தில் நடித்த போதே மஞ்சிமா மோகனும் கவுதம் கார்த்திக்கும் தங்களது மனதை பரிமாறிக்கொண்டார்கள் என்றது அப்படத்தின் யூனிட் வட்டாரம்.
அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கத்தை கடைசி ஷெட்யூலில் கூட கண்கூடாக பார்த்ததாகவும் ஷூட்டிங்கில் பேச்சு அடிப்பட்டது. ஆனால் இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் இதுபற்றி ஏதும் சொல்லாமல் இருந்தனர்.
ஆனால் மஞ்சிமா மோகனின் பிறந்த நாளையொட்டி சமூக வலைதளத்தில் கவுதம் கார்த்திக் அவரது படத்தை பகிர்ந்ததோடு வாழ்த்துகளையும் தெரிவித்தார். அதில்தான் முதல்முறையாக மஞ்சிமா உடன் வாழ்க்கையில் இணைவது குறித்து சூசமாக சொன்னார் கெளதம் கார்த்திக்
அதேநேரத்தில் காதல் தொடர்பான செய்திகளை மஞ்சிமா மோகன் மறுத்து வந்தார். “எனக்கும் கவுதம் கார்த்திக்கிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சக நடிகர்களே தவிர எங்களுக்குள் பர்சனலாக எந்த விஷயமும் இல்லை” என்று மலையாள சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார் மஞ்சிமா மோகன்.
மேலும் “இதுகுறித்து பலமுறை விளக்கம் கொடுத்தும், இதே செய்தி மீண்டும், மீண்டும் வருவது மனவேதனை அளிக்கிறது. என் பெற்றோர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எனக்கு பெரிய அளவில் வருத்தத்தை தருகிறது. ஆனால் அவர்களும் இந்த செய்தியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பதில் பெரும் மகிழ்ச்சி.
மூன்று வயதிலிருந்தே நான் சினிமாவில் இருக்கிறேன் மக்களிடம் திருமணம் குறித்து நான் ஏன் மறைக்க வேண்டும். என் திருமணம் குறித்து மக்களுக்கு நானே அறிவிப்பேன் இப்படி தவறான செய்திகளுக்கு இனிமேல் ரியாக்ட் செய்யபோவதும் இல்லை. கண்டுக்கொள்ளப் போவதும் இல்லை” என்று தெரிவித்தார்.
ஆனால் இப்பேட்டிக்கு பின்னால் சினிமா வாய்ப்புகளை மனதில் வைத்தே மஞ்சிமா காதலை மறுத்ததாக பேச்சு அடிப்பட்டது. திருமணமானால் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் வராது. அதனால் திருமணம் உறுதியாகும் வரையில் அதுகுறித்து எதையும் பேச வேண்டாமென மஞ்சிமா மெளனம் காத்ததாகவும் சொல்கிறார்கள்.
இப்போது நிலைமை கொஞ்சம் தீவிரமாகி இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
1989-ல் சோலைக்குயில்’ என்ற ஒரே படம்தான். அதில் நடித்த ராகினிக்கு கார்த்திக் மீது பற்றிக்கொண்டது காதல்.
2019-ல் ’தேவராட்டம்’ படத்தில் மஞ்சிமா மோகனுக்கு கெளதம் கார்த்திக் மீது அதே காதல் ஆட்கொண்டது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே காதலுக்கு மரியாதை செய்த கார்த்திக், தனது மகன் விஷயத்தில் கெடுபிடி காட்டுவார் என்பதை கெளதம் கார்த்திக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் கெளதமின் நண்பர்கள்.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், மகன் தனது காதல் விஷயத்தில் உறுதியாகவும் இருந்ததாகவும் தெரிகிறது.
தன்னைத் தேடி வந்த ஒரு சில படங்களையும் கூட கெளதம் கார்த்திக் இப்பிரச்சினையால் ஒப்புக்கொள்ளவில்லை. கெளதம் கார்த்திக் வெளியில் எங்கும் அதிகம் தலைக்காட்டவில்லை. வீட்டில் இருந்தபடியே காதலுக்காக அகிம்சை போராட்டத்தை நடத்தினார் என்றும் முணுமுணுக்கிறார்கள். இதில் கார்த்திக் கொஞ்சம் தனது பிடியை தளர்த்தி இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
பிரச்சினைகள் ஒரு பக்கம் தகதகத்து கொண்டிருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற தனது நண்பரின் திருமணத்திற்கு ஜோடியாக சென்று மீண்டும் கோலிவுட்டை பரபரக்க வைத்திருக்கிறார் கெளதம் கார்த்திக்.