ஷங்கர் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி நடித்த வெயில் (2006) மூலம் இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இப்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இசைப்பயணம் குறித்து பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ், “வெயில் படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அறிமுகத்துக்குபின் தமிழ், தெலுங்கு, இந்தி என ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் படம் தொடங்கி பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் படம், புதுமுகங்களின் படம் என நிறைய இசையமைத்துவிட்டேன்.
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில். அவரது தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 ஆம் ஆண்டில் என் இசைப் பயணம் தொடங்கியது. இப்போது 100-வது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். ‘சூரரைப் போற்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன்.
19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்று கூறியுள்ளார்
சரி, தொடர்ச்சியாக நடிப்பு, இசையமைப்பது என எதில் கவனம் செலுத்துப்போகிறீர்கள்’ என்றால், ‘‘தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும். நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன்.’’ என்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த ஆண்டு டியர் படத்தில் தொடங்கி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், தங்கலான், அமரன், லக்கி பாக்சர், , மட்கா, சர்ஃபிரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதில் தங்கலான், அமரன் பாடல்கள் பெரிய ஹிட்டாகி உள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் கோல்டன் ஸ்பாரோ பெரிய ஹிட்.