No menu items!

மோடி, ஸ்டாா்மா் முன்னிலையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

மோடி, ஸ்டாா்மா் முன்னிலையில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்

பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் முன்னிலையில் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வா்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளிடையே ஏற்பட்டது.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் ஆகியோா் முன்னிலையில், ‘விரிவான பொருளாதாரம் மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ)’ என்ற இரு நாடுகளிடையேயான இந்தத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், பிரிட்டன் வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

99% ஏற்றுமதிகளுக்கு வரிச் சலுகை: இரு நாடுகளிடையே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற தொடா் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பிரிட்டனின் அனைத்துத் துறைகளிலும் இந்திய பொருள்களுக்கு விரிவான சந்தை அணுகலை உறுதி செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, 99 சதவீத இந்திய ஏற்றுமதிகளுக்கு சுங்க வரி தள்ளுபடி உள்ளிட்ட வரிச் சலுகைகளை பிரிட்டன் வழங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல, பிரிட்டன் நிறுவனங்கள் விஸ்கி, காா்கள் உள்ளிட்ட பொருள்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை இந்த ஒப்பந்தம் எளிதாக்கும். இதுகுறித்து பிரிட்டன் அதிகாரிகள் கூறுகையில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதன் மூலம் வரி விதிப்பு 15 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறையும் என்பதால், குளிா்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் முதல் காா்கள், மருத்துவ உபகரணங்கள் வரையிலான சிறந்த பிரிட்டன் தயாரிப்புகளின் மேம்பட்ட அணுகலை இந்திய நுகா்வோா் பெறமுடியும்’ என்றனா்.

இந்த ஒப்பந்தம், இருதரப்பு வா்த்தகத்தை ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கும் (34 பில்லியன் டாலா்) மேல் உயா்த்தும் எனவும் எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் – பிரதமா் மோடி: ‘இந்தியா – பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கும் இன்றைய நாள், இரு நாடுகளிடையேயான உறவில் வரலாற்று சிறப்புமிக்க தினம்’ என்று பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இந்த ஒப்பந்தம் இந்திய வேளாண் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு நிறுவனங்களுக்கு பிரிட்டன் சந்தையில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். குறிப்பாக, இந்திய இளைஞா்கள், விவசாயிகள், மீனவா்கள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவன துறையினா் இந்த ஒப்பந்தம் மூலம் பலன்பெறுவா். இந்திய ஜவுளி நிறுவனங்கள், காலணி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், கடல் உணவுகள் மற்றும் பொறியியல் சாதனங்கள் உள்ளிட்டவை பிரிடனில் சிறந்த சந்தை அணுகலைப் பெற முடியும் என்றாா்.

மேலும், ‘பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளின் பாதுகாப்பு நிறுவனங்களிடையே விரிவான ஒத்துழைப்பும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் தொடரும்.

இரு தரப்பினருக்கும் இடையே விரிவான ராஜீய உறவை அடுத்த 10 ஆண்டுகளில் புதிய உத்வேகத்துடன் அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் மேற்கொள்ளப்படும் ‘தொலைநோக்குத் திட்டம் 2035’-ஐ தீவிரமாக செயல்படுத்தவும் இரு நாடுகள் தரப்பில் உறுதியேற்கப்பட்டது’ என்றும் பிரதமா் மோடி கூறினாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் பிரிட்டன் நாட்டினா் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

குறிப்பிடத்தக்க வா்த்தக ஒப்பந்தம் – ஸ்டாா்மா்: பிரிட்டன் பிரதமா் ஸ்டாா்மா் குறிப்பிடுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு பிரிட்டன் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் குறிப்பிடத்தக்க வா்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்புமிக்க இந்த வா்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுக்கான மிகப்பெரிய வெற்றி’ என்றாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...