கடந்த வியாழக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவரது தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, எக்ஸும் அவருடன் பிறந்த மற்ற இருவரும் மோதியுடன் பரிசுகளை பகிர்ந்துகொண்டனர்.
வாஷிங்டனுக்கு வருவதற்கு முன்னரும் மஸ்க் தனது குழந்தைகளுடன் காணப்பட்டுள்ளார். துருக்கி அதிபருடனான சந்திப்பு, அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக மஸ்கை அறிவித்து டைம் பத்திரிகை நடத்திய விழா போன்றவற்றில் மஸ்குடன் அவரது குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர்.
மஸ்கின் குழந்தைகள் அவருடன் வருவதற்கு என்ன காரணம்?
“பொது இடங்களில் தோன்றும் போது குழந்தைகளை அவருடன் வைத்துக் கொள்வது, அவரை மேலும் சிறந்தவராக காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல்வாதியின் அல்லது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை, அவரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான ஒரு நடவடிக்கை,” என்கிறார் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் மக்கள் தொடர்பு பேராசிரியர் கர்ட் பிரடாக்.
குழந்தைகளை ஏன் அழைத்து வர வேண்டும்?
இருந்தும், மஸ்கின் சிறு குழந்தையை ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் முடிவு வித்தியாசமானது என்கிறார் பிரடாக்.
30 நிமிட செய்தியாளர் சந்திப்பின் போது எக்ஸ் சலிப்பாக காணப்பட்டதுடன் தனது தந்தையை போல் செய்து கொண்டு, தரையில் அமர்ந்திருந்த அவரை, அதிபர் அவ்வப்போது பார்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அறையில் இருந்த யாரோ ஒருவரை அமைதி காக்கும்படி எக்ஸ் சைகை செய்தது போல் தோன்றியது.
குழந்தைகளை அழைத்து வருவது திட்டமிட்டது என்கிறார் பிராடாக். இது மஸ்க் மற்றும் டிரம்ப் இருவருக்குமே பலனளிப்பதுதான்.
“சில விஷயங்களுக்கு கவனத்தை ஈர்த்து, பல விஷயங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புவது என இதில் ஒரு திட்டமிருப்பதாக நான் கருதுகிறேன்.”
மக்கள் தொடர்பு திட்டமிடல் ஆலோசகரக இருக்கும் ஜான் ஹாபர் 5 அதிபர் தேர்தல் பரப்புரைகளில் பணியாற்றியுள்ளதுடன் ஹார்வர்டில் பயிற்றுவிக்கிறார். மஸ்கின் குழந்தைகள் அவ்வப்போது தோன்றி, வைரலாகும் தருணங்களை உருவாக்குவது டிரம்புக்கு உதவிகரமாக இருப்பதாக ஜான் ஹாபர் சொல்கிறார்.
டிரம்பை பொருத்தவரை, மேலும்மேலும் குழப்பம் ஏற்படுத்தினால் , மற்றவர்கள் ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துவது குறைகிறது. குழப்பம் அவருக்கு பலனளிக்கிறது.” என்கிறார் ஹாபர்.
மஸ்கின் முன்னாள் காதலியும் எக்ஸின் தாயுமான கிரைம்ஸ், தனது மகன் அதிபர் அலுவலகத்தில் தோன்றியதை விமர்சிக்கிறார்.
“அவன் பொது வெளியில் இவ்விதம் இருக்கக் கூடாது,” என எக்ஸ் தள பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
“நான் இதை பார்க்கவில்லை.. ஆனால் அவன் கண்ணியமாக இருந்தது மகிழ்ச்சியளிகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.
தனது மகன் வெளிச்ச வட்டத்தில் இருப்பதை தான் ரசிக்கவில்லை என 2022 வேனிட்டி ஃபேர் கட்டுரை ஒன்றில் கிரைம்ஸ் தெரிவித்திருந்தார்.
“குடும்பத்தில் என்ன நடந்தாலும், குழந்தைகள் அதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஆனால் எக்ஸ் அங்கே வெளியே இருக்கிறான். அவன் தனது பாதுகாப்பில் இருப்பதாக ஈலோன் பார்க்கிறார் என நினைக்கிறேன். அதனால அவனை எல்லாப் பக்கமும் அழைத்துச் செல்கிறார். எக்ஸ் அங்கே இருக்கிறான். அவன் சூழ்நிலை அப்படி, ஆனால், எனக்கு சொல்ல தெரியவில்லை.” என்கிறார் கிரைம்ஸ்.
மஸ்க்கும் அவரது குழந்தைகளும்
அரசியலுக்கு வருவதற்கு வெகு காலதிற்கு முன்னரே மஸ்க் தனது குழந்தைகளை தம்முடன் வர அனுமதித்திருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர், தன்னுடைய மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மீது கவனத்தை ஈர்க்கும் ஆர்வத்துடனிருந்த துவக்க காலத்திலும், அவரது குழந்தைகளை நிகழ்ச்சிகளில் பார்ப்பது அபூர்வமானதாக இருக்கவில்லை.
2015-ல் சிலிகான் பள்ளத்தாக்கில் டெஸ்லா தொழிற்சாலையில் புதிய வாகனம் ஒன்றின் அறிமுகத்திற்காக செய்தியாளர்களும். ஆய்வாளர்களும் காத்திருந்த போது, அவருடைய ஐந்து குழந்தைகள் சத்தமாக சிரித்துக் கொண்டு, நடைபாதைகளில் ஒருவரை ஒருவர் விரட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.
பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், மஸ்கின் குழந்தைகள் அங்கிருந்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இறுக்கத்தை தளர்த்தி, ஒரு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தியது.
பிற நிறுவனங்களால் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் உத்யோகப்பூர்வமாக நடத்தப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து இது வேறுபட்டு இருந்தது. அந்த நிகழ்ச்சிகளில் ஒரு அதிகாரியின் மிக சிறு வயது குழந்தைகளை பார்ப்பது வித்தியாசமானதாக இருந்திருக்கும்.
மஸ்க் மூன்று பெண்கள் மூலம் 12 குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
அவரது அதிகம் அறியப்பட்ட மகன், X Æ A-12?, “லில் எக்ஸ்” என அழைக்கப்படுகிறார். இது சமூக வலைதளமான டிவிட்டரை வாங்கிய போது அதன் பெயரை மாற்ற மஸ்க் பயன்படுத்திய அதே எழுத்துதான்.
நான்கு வயதான அவரை ” உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை தரும் மனிதன்” என மஸ்க் விவரித்துள்ளார்.
மஸ்க் தம்மை தனது குழந்தைகளுக்கு “முழுமையாக அர்ப்பணித்திருப்பதாகவும்” அவர்கள் மீது அதீத அக்கறை கொண்டிருப்பதாகவும்”, மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாக்சன் டைரி ஆஃப் ஏ சீஇஓ பாட்காஸ்டில் தெரிவித்திருந்தார்.
“அவர் செய்வது எல்லாவற்றிலும் ஊறியிருக்கும் தீவிரம், அவரது சொந்த குழுந்தைகள், காதலிகள், அவரது மனைவிகளிடமும் உண்டு,” என்கிறார் ஐசாக்சன்.