குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார். எடிட்டர் எஸ்.ஏ.பி.க்கு இது நூற்றாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மாலனின் எடிட்டர் குறித்த உரையிலிருந்து சில பகுதிகள்:
எடிட்டர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பத்திரிகைதான் வெளியில் தெரிய வேண்டும் என்று விரும்பியவர். தன் அடையாளம் என்பது தன் பத்திரிகைதான் என்று முகம் காட்டாமல் வாழ்ந்தவர்.
எஸ்.ஏ.பி அண்ணாமலை மிக மிக செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் 1940களிலேயே விமானங்கள் வாங்கி விமானச் சேவை நடத்தியவர்கள். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் பயணிக்க இலவசமாய் விமானங்களை கொடுத்தவர்கள்.
பாகிஸ்தான் போரின் போது தங்கள் விமானங்களை பயன்படுத்திக் கொள்ள விமானப் படைக்கு விமானங்கள் தந்தவர்கள்.
வழக்கறிஞருக்கு படித்தாலும் எழுத்தின் மீது பத்திரிகைகளின் மீதும் ஆர்வம் கொண்டிருந்ததால் குமுதம் வார இதழைத் துவக்கினார்.
முதலில் 2,000 பிரதிகளை அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பினார். அப்போது அவருக்கு வயது 23. இளைஞனை நம்பி பணம் கட்டுவதா என்று ஏஜெண்டுகள் தயங்கினார்கள். அதனால் தன் பெரியப்பா, அழகப்ப செட்டியாரின் அனுமதியோடு, அவரை கவுரவ ஆசிரியராக நியமித்தார். இதனால் ஏஜெண்டுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அப்படி தொடங்கிய குமுதம் ஐந்து லட்சம் பிரதிகளை தாண்டி இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக வெற்றி பெற்றது.
பொதுவாக, பத்திரிகைகள் மூன்று விதமாக இருக்கும். ஆசிரியரின் எண்ணங்கள் படி எழுதுவது, வாசகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப எழுதுவது, இரண்டும் கலந்து எழுதுவது என, மூன்று வித பத்திரிகைகள் இருக்கும். அதில், குமுதம் இதழ் வாசகர்களுக்காக எழுதப்பட்டது.
எஸ்.ஏ.பி.அண்ணாமலை மிக எளிமையான மனிதர். நான்கு முழ வேட்டி, அரைக்கை சட்டை இதுதான் அவர் உடை. சாமனிய மக்களுடன் பயணிப்பார். அதன் மூலம் அவர்களது கருத்துக்களை அறிவார்.
அவர் எப்போதும், எல்லோரிடமும் மரியாதையாகப் பழகினார். வயதில் குறைந்தவர்கள், தன்னைவிட வசதி வாய்ப்பில் குறைந்தவர்கள் என யாரையும் தாழ்த்தி நினைக்க மாட்டார்.
‘ஏய், டேய்’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதே இல்லை. அவர் இருந்த வரை, அவர் தான், ‘அரசு பதில்கள்’ பகுதியை எழுதினார்.
பிரார்த்தனை மீது நம்பிக்கை கொண்டவராக இருந்ததால் கூட்டுப் பிரார்த்தனை பகுதியை குமுதத்தில் துவக்கினார்.
திரைப்பட விமர்சனங்கள் எழுதும்போது, சிறு நிறுவனங்கள், புதிய இயக்குநர்கள், நாயக, நாயகியரை கடுமையாக விமர்சித்து எழுதக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார்.
புதிய எழுத்தாளர்களை இளைய பத்திரிகையாளர்களை ஊக்குவித்தார். அவர்களால் புதிய கருத்துக்கள் கிடைக்கும் என்று நம்பினார்.
இவ்வாறு மாலன் பேசினார்.