No menu items!

மீண்டும் டிரோன் தாக்குதல் பாகிஸ்தான் அட்டூழியம்

மீண்டும் டிரோன் தாக்குதல் பாகிஸ்தான் அட்டூழியம்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் வெடிகுண்டு சத்தம் கேட்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ள ஜம்மு – காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “இப்போது போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகர் முழுக்க வெடிகுண்டுச் சத்தம் கேட்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். சனிக்கிழமை போர் நிறுத்தம் குறித்த இருதரப்பு ஒப்புதல் அறிவிக்கப்பட்ட மூன்று மணி நேரத்திலேயே ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், சம்பா, கத்துவா, அகநூர், உதம்பூர், நவ்சேரா பகுதிகளில் போர் நிறுத்தத்தை அத்துமீறும் வகையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்று அறிவித்த பின், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன் தாக்குதலைத் தொடருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் டிரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்து வருவதாக ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத்தில் பல்வேறு இடங்களிலும் மீண்டும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வான்வெளி பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை விமானப்படை எடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், உதம்பூர், கதுவா, ராஜஸ்தானில் பார்மர், ஜெய்சால்மர், பஞ்சாபில் ஃபெரோஸ்பூர், பதான்கோட், குஜராத்தில் கட்ச் மாவட்டப் பகுதிகள் உள்பட வட, வடமேற்கு மாநிலங்களில் பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டு வரும் டிரோன் தாக்குதல் எதிரொலியாக பல்வேறு இடங்களிலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலாவதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், இப்போது மீண்டும் இந்திய எல்லைப் பகுதிகளைக் குறிவைத்து வான் வழி தாக்குதல்களை அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டுள்ளதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, பிரதமர் மோடி முப்படை தளபதிகளுடன் போர் நிறுத்த அறிவிப்புக்கு பின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்திய ராணுவம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இரவு 11 மணி நிலவரப்படி, ட்ரோன் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், வான் வெளி பாதுகாப்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...