பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். “No regrets. There is no time for that. Regret is boring” என்ற ஏ.ஆர். ரஹ்மானின் பிரபல மோற்கோள்தான் தூரிகை கபிலனின் ஃபேஸ்புக் கவர் போட்டோவாக இப்போதும் இருக்கிறது. “வருத்தம் இல்லை. அதற்கு நேரமில்லை. வருத்தம் சலிப்பை ஏற்படுத்துகிறது” என்று சொன்னவர் கடைசியில் வருத்தத்தில் தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளது துரதிஷ்டவசமானது.
கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வருகிறார். 2001இல் விக்ரம் நடிப்பில் வெளியான, ‘தில்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா’ என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் பிரபலமானார் கபிலன். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களீல் 100க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதி இருக்கிறார். ரஜினி மற்றும் விஜய்யின் பல படங்களில் ஓப்பனிங் பாடல்களை இவர் எழுதியுள்ளார். கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்தும் இருக்கிறார்.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் வசித்து வரும் கபிலனுக்கு இரண்டு குழந்தைகள். இதில் மூத்த மகள் தூரிகை. 1994 மே 22ஆம் தேதி பிறந்தவர். கடைசி பிறந்த நாள் அன்று Happy Birthday Queen என மகளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார், கபிலன். அந்த தேவதை இப்போது கபிலனை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட், பத்திரிகையாளர், யூ டியூப்பர் என பன்முகம் கொண்டவர் தூரிகை கபிலன். முன்னணி ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 2020 முதல் ‘பீயிங் வுமன்’ எனும் இதழையும் Being Women Magazine’ எனும் யூ டியுப் சேனலையும் நடத்தி வந்தார். ‘பீயிங் வுமன் மேகசின்’ தொடக்க விழாவின்போது, ‘பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகத்தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையை தொடங்கினேன். பெண்கள் குறித்த அவர்களுடைய பாசிட்டிவ்வான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன். பெண்களைக் கொண்டாடுவதற்குதான் இந்த பத்திரிகை’ எனப் பேசியிருந்தார் தூரிகை.
ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகை. தூரிகை கபிலனின் ஃபேஸ்புக் கவர் படங்களை அதிகம் அலங்கரித்திருப்பவர் ஏ.ஆர். ரஹ்மான்தான், அடுத்ததாக பெரியார் எழுத்துகள் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்.
‘தி லேபிள் கீரா’ (The Label Keera) எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் தூரிகை கபிலன் நடத்தி வந்தார். வசந்த பாலனின் ‘ஜெயில்’ உட்பட பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சென்னை ஐஐடியில் வரும் 16ஆம் தேதி ஆண் – பெண் சமத்துவம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்தான ஆயத்த பணிகளை செய்து வந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உட்பட பலருடன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தொடர்பாக பேசியுள்ளார். இந்நிலையில்தான், நிகழ்ச்சிக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில், தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கு எதிரான மனநிலை கொண்டவர் தூரிகை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெண்களின் தற்கொலை தொடர்பாக ஃபேஸ்பிக்கில் பதிவிட்டுள்ளதில் இதை உறுதியாக சொல்லியுள்ளார். அந்தப் பதிவில்,
‘தற்கொலை என்பது எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல, உங்கள் தற்கொலையால் யாரும் அணுவைக் கூட இழக்க மாட்டார்கள். நாம் நம் வாழ்க்கையை இழக்கிறோம், நம் சிரிப்பை இழக்கிறோம், நம் இன்பங்களை இழக்கிறோம், நம் அனுபவங்களை இழக்கிறோம், நம் பாராட்டுக்களை இழக்கிறோம், நம் வாழ்க்கையை முழுவதுமாக இழக்கிறோம்.
மக்கள் உங்கள் தற்கொலை பற்றி சமூக ஊடகங்களில் ஒரு போஸ்டை வெளியிடுவார்கள், அவர்கள் ஓரிரு நாட்கள் சோகமாக இருக்கக்கூடும். உறவுகள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் அவை எண்ணக்கூடிய நாட்கள்தான் நீடிக்கும். ஒரு வருடம் அல்லது 5 அல்லது 10 வருடங்கள் வரை இருக்கும். அதன்பின்னர், அவர்கள் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்புவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாடுவார்கள், மக்களுடன் புன்னகைப்பார்கள், மற்றும் வாழ்க்கையின் ஓட்டத்தால் விஷயங்கள் சாதாரணமாக மாறும்.
ஆனால், உங்கள் பெற்றோரின் வலி மற்றும் அவர்கள் உங்கள் மீது பொழிந்த அன்பு? அந்த வலி ஈடுசெய்ய முடியாதது, உங்கள் எல்லா நினைவுகளுடன் அவர்களைத் தனியாக விட்டுவிடுகிறீர்கள்.
தற்கொலைக்குப் பின்னால் உள்ள கசப்பான உண்மை, மக்கள் உங்களைத் தவறவிடுவதை விட, உங்கள் பல வருட புன்னகையை இந்த தருணத்தில் நீங்கள் இழக்கிறீர்கள்! நீங்கள், உங்கள் மீதமுள்ள வாழ்க்கையை இழக்கிறீர்கள். உங்கள் சொந்த அழகையும் புன்னகையையும் அனுபவிக்க தவறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியின் நிலைகளைக் காணத் தவறுகிறீர்கள்!
அன்பான பெண்களே, ஒரு பெண்ணாக இருப்பதால், அனைத்து அசாதாரணங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சமநிலைப்படுத்தி, வலுவாக இருக்கவும். எங்கள் பெண்களின் திறமையை நிரூபிக்கவும், உங்கள் வாழ்க்கையில் அன்பு செலுத்தவும் வலுவாக இருக்க வேண்டும்! பெண்களே வலுவாக இருங்கள், வலுவாக மேம்படுத்துங்கள்!” என்று சொன்னவர் கடைசியில், தனது நினைவுகளுடன் பெற்றோரை, கபிலனை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்.