ஆந்திராவில் நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் உளத்துறை அதிகாரிகள் அதன் விசாரிணையில் பல அதிரடி சம்பவங்களை தெரிந்து கொள்கிறார்கள். ரத்னகிரி என்ற மலைகிராமத்தில் செங்கடல் பகுதியில் வசிக்கும் மக்கள் காலம் காலமாக கடற்பகுதில் பெரும் கடத்தல் செயலில் ஈடுபடுகிறார்கள். இது ஆளும் தரப்பை சேர்ந்த மந்திரிகள் தலையீட்டால் ஆயுதக்கடத்தலாக மாறுகிறது. இதுதான் அவர்களின் வாழ்வாதாரமாக மாறிப்போய் விடுகிறது.
இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவர அந்த கிராமத்து இளைஞன் தேவ்ரா ஒரு திட்டம் போடுகிறார். அதன்பட்டி இனிமேல் மீன் பிடித்து விற்பது என்கிற முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இதனை எதிர்க்கும் பைரா மீறி கடற்கொள்ளைக்கு போக வேண்டும் என்கிறார். இதனால் மோதல் ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பதை ஆக்சன் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் கொரட்டாலா சிவா.
என்.டி.ஆர். புலி பாய்ச்சலும், கொலைப் பார்வையுமாக ஒரு ஏவுகனைபோல படம் முழுவதும் வந்து நிற்கிறார். கருணையும் கடமையுமாக அவர் செய்யும் வேலையும், ஆயுதபூஜைக்காக பக்கத்து கிராமத்து வீரர்களோடு மோதும் ஆக்ரோஷமும் நமக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. அதோடு கடலில் கண்டெயினர் கப்பலில் கொள்ளை அடிக்கும் காட்சி விறுவிறுப்பு. படம் முழுவதும் வரும் துணை நடிகர்களும் பற்ற வைக்கும் வெடியாக மோதுவது காட்சிக்கு பலமாக இருக்கிறது. வேண்டா வெறுப்பக கடத்தல் தொழிலில் ஈடுபடும் தேவராவுக்கு கப்பல்படை அதிகாரியாக வரும் நரேன் பேசுவதைக் கேட்டவுடன் மனம் மாறும் இடம் நல்ல திருப்பம்.
இடைவேளைக்குப் பிறகு இன்னொரு என்.டி.ஆர். வருவதும் அவரை வளைத்துப் போட ஜான்வி கபூர் காத்திருப்பதும் வேகத்தைக் கூட்டுகிறது. தேவராவின் மகன் வரா பயந்தாங்கொள்ளியாக காட்டப்படுவது திரைக்கதைக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. அடுத்தடுத்து வரும் திருப்பமும், சஸ்பென்ஸ் காட்சிகளும் படத்தை வேகப்படுத்தியிருக்கிறது. கடலுக்குள் மகன் நிகழ்த்தும் சண்டை விருந்து. முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்திருக்கிறது. இதை நம்பியே முழு திரைக்கதை இருப்பதால் சண்டைப் பிரியர்களுக்கு தேவரா தேவாமிர்தமாக இருக்கும்.
அனிருத்தின் பாடல்கள்,பின்னணி இசை இரண்டும் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. மொழி தாண்டி சாதித்திருக்கிறார் ’ஹ’னிருத். எந்த லாஜிக்கும் இல்லாமல் பொழுது போக்காக மட்டும் தயாராகியிருக்கும் தேவரா என்.டி.ஆர். ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும். மற்றபடி தமிழ் கலாச்சாரத்திற்கு ஓட்டாத காட்சிகள் அதிகம் இருக்கிறது.