முதல் பாகத்தில், வீட்டிலிருந்து தப்பிக்கும்போது உயிரிழப்பதைப் போல காட்டப்படும் சீனிவாசன் கோமா நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருடைய சகோதரர் ரகு (இன்னொரு அருள்நிதி) தந்தையின் சொத்து தனக்கு மட்டுமே வர வேண்டும் என்று போராடுகிறார். இன்னொரு பக்கம், அன்புக் கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் டெபி அதைப் புத்தத் துறவி உதவியுடன் அறிய களமிறங்குகிறார். இந்த மூவரின் கதையும் ஒரு புள்ளியில் இணைகிறது. இவர்கள் உயிரைக் காவு வாங்க நினைக்கும் ‘டிமான்ட்டி காலனி’ பேயின் ஆத்திரமும் தெரிய வருகிறது. அதைத் தடுக்க அருள்நிதியும், பிரியா பவானி சங்கரும் என்ன மாதிரியான சம்பவங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை கிராபிக்ஸ் உதவியுடன் மிரட்டியிருக்கிறார் இயக்குனர் அஜய்ஞானமுத்து.
முதல் பகுதி எடுக்கும்போது இப்படி வெற்றி பெறும் என்று நினைத்துப் பார்க்கததால் 2ஆம் பாகத்தில் இறந்து போனதாக காட்டப்படும் அருள்நிதியை கோமா நிலையில் இருக்கிறார் என்று காட்டி அவரது அண்ணனாக இன்னொரு அருள்நிதியை காட்டுகிறார்கள். அவரும் படத்தின் ரிதம் தெரிந்து உடல்மொழியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது பங்கை நிறைவாக செய்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் திகில் படங்களில் இன்னும் கூடுதல் உணர்வை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்.
டிமாண்டி பங்களாவுக்குள் ஆத்மாக்கள் முன் நடுங்கியபடி நிற்கும் மாணவிகளும், தங்க டாலரும் விறுவிறுப்பை கூட்டுகிறது. ரெஸ்டாரெண்டுக்குள் நடக்கும் காட்சியும் புத்த பிட்சுகளின் நிலையில் பரபரப்பான காட்சிகள்தான்.
டிமான்ட்டி காலனி படத்தை பொறுத்தவரை சாத்தான் வழிபாடு, ஆண்டி கிறிஸ்து, டிமான்ட்டி செயின் என கதையை நகர்த்தி இருக்கிறார். கதையின் முதல் பாதி சிறப்பாக அமைந்தாலும், அதனுடைய தாக்கம் இரண்டாம் பாதியில் இல்லை. இரண்டாம் பாதியின் திரைக்கதையின் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும். படத்தில் ஹாரர் காட்சிகள் மிகவும் குறைவு. இன்னும் அதிக திகில் காட்சிகள் இடம் பெற்று இருக்கலாம்.
ரெஸ்டாரெண்டில் புதைக்கப்பட்ட மாந்த்ரீக சிலையால் தீய சக்தியால் நெருங்க முடியாது என்றால் அந்த சிலையை வெளியில் எடுத்து கையில் வைத்துக்கொண்டால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலை இருக்கிறது; இயக்குனர் அதை மறந்து போனது ஏன்?
இருட்டு, மழை, துரத்தல் என்று இருந்தாலும் சில இடங்களில் என்ன நடக்கிறதென்று புரிந்து கொள்ள முடியாத நிலை இருக்கிறது.
சாம் சி.எஸ். இசையில் மிரள வைக்கும் சத்தங்கள் என்று திகில் படங்களுக்கு இருக்கும் டெம்போவை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹரிஷ் கண்ணன் கேமரா பல இடங்களில் பயமுறுத்துகிறது.
ஆனாலும் வெற்றியை வைத்துக்கொண்டு 2ஆம் பாகம் எடுக்கக்கூடாது. காரணம் இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதை இது உணர்த்தியிருக்கிறது.