‘நைட், தூங்கப் போறதுக்கு முன்பு கூட நல்லாத்தான் பேசிக்கிட்டிருந்தார்’
நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் சொன்ன வார்த்தை இது. இரவில் வழக்கம் போல தூங்கப் போயிருக்கிறார் நடிகர் டெல்லி கணேஷ். எண்பது வயதான டெல்லி கணேஷ், இரவு 11.30 மணியளவில் இறுதித் தூக்கம் தூங்கிவிடுவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?
நாற்பது ஆண்டு காலம், நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள். நடிகராக ஒருவர் நாற் பதாண்டு காலம் திரைத்துறையில் நீடிப்பதே ஓர் இமாலய சாதனைதான். சத்தமே இல்லாமல், அந்த சாதனையை அழகாகச் செய்திருக்கிறார் டெல்லி கணேஷ். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளில் அவர் நடித்துக்கு குவித்த படங்கள் நானூறைத் தாண்டும்.
டெல்லியில் தக்சிண பாரத நாடக சபா மூலம், முதலில் நாடகத்தில் தொடங்கியவர் டெல்லி கணேஷ். பின்னர் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், இன்றுள்ள யூடியூப், வெப் சீரிஸ் என அவரது கலையுலகம் விரிவடைந்தது. அந்த வகையில், முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் நடிகர் டெல்லி கணேஷ் ஒரு பாலமாக இருந்திருக்கிறார் என்றுகூட சொல்ல முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடுதான் டெல்லி கணேஷின் சொந்த ஊர். பிஞ்சு வயதில் தாய் மரணம். தந்தை இரண்டாவது திருமணம். இளம் வயதில் மதுரைக்கு இடம்பெயர்ந்து டி.வி.எஸ்.சில் பணிபுரிந்திருக்கிறார். அவரது சுருக்கெழுத்துத் திறமை இந்திய விமானப் படையில் வேலை வாங்கித்தர பெங்களூருக்கு இடப்பெயர்வு.
ஓராண்டு பயிற்சி. அதன்பிறகு தலைநகர் டெல்லிக்கு இடமாற்றம். டெல்லி என்ற பெயர் அவருடன் ஒட்டிக் கொள்ள அதுதான் காரணமாக அமைந்தது.
1964 முதல் 1974 வரை பத்தாண்டு காலம் இந்திய விமானப்படையில் பணிபுரிந்திருக்கிறார் டெல்லி கணேஷ். இந்திய பாகிஸ்தான் போரில் காயமடைந்த முப்படை வீரர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அவர் நடிகராக காலூன்ற உதவிய முதல்படி. ஒருவகையில் பார்த்தால் டெல்லி கணேஷ் நடிகரானது ஒரு விபத்து என்றே சொல்ல வேண்டும்.
விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் சென்னை வாசம். நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் நாடக கம்பெனியில் நாடகங்கள் என டெல்லி கணேஷின் கலையுலக வாழ்க்கை மேலும் நகரத் தொடங்கியது. விசு எழுதிய ‘டௌரி கல்யாண வைபோகமே’ நாடகத்தில் டெல்லி கணேஷின் நடிப்பைப் பார்த்து ஜெய்சங்கர், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். ‘எஸ்.வி.சுப்பையாவின் வாரிசு’ என்பது டெல்லி கணேஷிக்கு அப்போதிருந்த செல்லப்பெயர்.
அதன்பின் பட்டணப் பிரவேசம் நாடகத்தில் டெல்லி கணேஷின் நடிப்பை இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் பார்க்க, 1976ஆம் ஆண்டு பட்டணப் பிரவேசம் பாலச்சந்தரின் இயக்கத்தில் திரைப்படமாக உருவெடுத்தபோது திரைப்பட நடிகராக மாறினார் டெல்லி கணேஷ். அவர் நடித்த முதல் திரைப்படம் அதுதான். புதுமுகம் ஒருவருக்கு புகுமுகமாக இருந்த அந்தப் படத்தின் பெயரில் ‘பிரவேசம்’ என்று இருந்தது வெகு பொருத்தம்.
பட்டணப் பிரவேசம் படத்தின்போதுதான் அவரது பெயருடன் டெல்லி ஒட்டிக் கொண்டது. உபயம்: இயக்குநர் கே.பாலச்சந்தர்.
கடற்கரை தாகம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். எழுபதுகளில் பிரபல நடிகைகள் சுஜாதா, சுமித்ரா போன்றவர்கள் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
அதன்பின் ராஜபார்வை, புன்னகை மன்னன், நாயகன், மைக்கேல் மதனகாமராஜன், சிந்து பைரவி, ஆகா, தெனாலி என ஏராளமான திரைப்படங்கள்.
சிந்து பைரவியில் மிருதங்க வித்வான், மைக்கேல் மதன காமராஜனில் சமையல்காரர் பாலக்காட்டு மணி ஐயர், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லன் பிரான்சிஸ் அன்பரசு, நாயகன் படத்தில் வேலு நாயக்கருக்கு ஆப்த நண்பராக அருகில் இருந்து இந்தியைத் தமிழாக்கும் மொழி பெயர்ப்பாளர், பொல்லாதவன் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், தமிழன் படத்தில் வழக்கறிஞர்… இப்படி பலப்பல வேடங்களில் பட்டை தீட்டிய வைரமாக மிளிர்ந்தவர் டெல்லி கணேஷ்.
பசி படத்தில் ரிக்சாகாரனாகக் கூட அவர் நடித்திருக்கிறார். அதற்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் பரிசும் பெற்றிருக்கிறார்.
கலைஞானி கமல்ஹாசனுடன் டெல்லி கணேஷ் நடித்த அவ்வை சண்முகி போன்ற படங்கள் என்றும் மறக்க முடியாத திரைப்படங்கள். அவ்வை சண்முகி படத்தில் டெல்லி கணேஷ் ஏற்று நடித்த சேதுராமய்யர் கதாபாத்திரம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத கதாபாத்திரம்.
சிந்துபைரவி படத்தில் மேடையில் சுகாசினி பாடும் பாடறியேன் பாடலுக்கு மறந்துபோய் மிருதங்கம் வாசிக்கத் தொடங்குவார் டெல்லி கணேஷ். ஜே.கே.பி.யின் கனல் கக்கும் பார்வையைக் கண்டதும் வாசிப்பை சட்டென நிறுத்தி அவர் காட்டும் முகம் பாவம், மிகச்சிறந்த நடிப்புக்கு இன்றும் கூட உரைகல்.
மலையாளத்தில் தேவாசுரம், கீர்த்தி சக்ரா, போக்கிரி ராஜா, காலாபானி மாதிரியான படங்கள் டெல்லி கணேஷ் நடித்த படங்கள். போதாக்குறைக்கு சொந்தமாக என்னுள் ஆயிரம் என்ற ஒரு திரைப்படத்தையும் தயாரித்து இவர் கையைச் சுட்டிருக்கிறார்.
வசந்தம், கஸ்தூரி போன்ற தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், குறும்படங்களில் மட்டு மல்ல, இறுதியாக ஒரு இந்தி வெப் சீரிஸிலும் டெல்லி கணேஷ் நடித்திருக்கிறார். அரண்மனை-4, இந்தியன்-2 போன்ற திரைப்படங்கள் அவர் லேட்டஸ்டாக நடித்த திரைப்படங்கள்.
நடிகர் என்பதைத் தவிர டெல்லி கணேஷிக்கு இன்னும் சில சிறப்பம்சங்களும் உண்டு. மகா கவி பாரதியார் பற்றி நிறைய படித்தவர், இரண்டு நூல்கள் எழுதியவர், பின்னணி குரல் தரும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர், டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நெல்லை மண்ணை மணக்காமல், மண் மணக்க நெல்லைத் தமிழ் பேசுபவர் என்பதெல்லாம் டெல்லி கணேஷிக்கு உள்ள இதர பெருமைகள்.
கோயில்களுக்கு நிறைய கொடையளித்தவர் டெல்லி கணேஷ் என்பது பலருக்கும் தெரியாத விடயம். 1994ஆம் ஆண்டு இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
எண்பது வயதான டெல்லி கணேஷ் அண்மையில்தான் அவரது எண்பதாவது திருமண விழாவை கொண்டாடியிருக்கிறார். பண்பட்ட நடிகர் என்பதுடன் சிலவேளைகளில் பணம் வாங்காமலும் நடித்திருக்கிறார் என்பது அவருக்குள்ள சிறப்பு.
நடிகர் டெல்லி கணேஷிக்கு இறுதியஞ்சலி செலுத்தியுள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘அருமை யான மனிதர், அற்புதமான நடிகர்’ என்று பாராட்டியிருக்கிறார்.
டெல்லி கணேஷ் உயிரோடு இருந்த காலத்தில், ‘இந்தியாவின் தலைநகரத்தை பெயரில் தாங்கியவர்’ என்று அவரைப் பாராட்டியிருக்கிறார் மற்றொரு நகைச்சுவை நடிகரான சார்லி. அந்தப் பாராட்டை இன்னொரு நேரம் மீண்டும் சொல்லச் சொல்லி கேட்டு ரசித்திருக்கிறார் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்த வந்த நடிகர் சார்லி இதை நினைவுகூர்ந்திருக்கிறார்.