ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம் ’லால் சலாம்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பியிருக்கும் ஜீவிதா, ரஜினி தங்கையாக நடித்திருக்கிறார். காமெடி நடிகர் செந்திலும் நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினியுடன் இணைந்திருக்கிறார்.
இப்படத்தில் தனது மகளுக்காக ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.
ரஜினியின் கால்ஷீட்டை வாங்கிய ஐஸ்வர்யா, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங்கை முதலில் மளமளவென முடித்துவிட்டார். பிறகு மற்ற நட்சத்திரங்கள் இருக்கும் காட்சிகளை படமாக்கினார்.
ஒருவழியாக ஷூட்டிங்கை முடித்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் மும்முரமான ஐஸ்வர்யாவுக்கு பலத்த அதிர்ச்சி.
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிடலாம் என நினைத்த ஐஸ்வர்யா எடிட்டருடன் உட்கார்ந்திருக்கிறார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை ஆவிட் ப்ரோவுடன் இணைத்திருக்கிறார்கள். ஆனால் ஹார்ட் டிஸ்க்கில் ஒன்றுமே இல்லையாம். அதாவது ரஜினியின் காட்சிகள் எதுவும் இல்லையாம்.
போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்த ஸ்டூடியோவில் நடந்த குளறுபடிகளால் இந்த காட்சிகள் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து டெலிட் ஆகி இருக்கலாம் என்று அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
ரஜினி கொடுத்த 23 நாள் கால்ஷீட்டை வைத்து, மும்பையில் ஷூட் செய்த காட்சிகள் இவை என்பதால் ஐஸ்வர்யாவுக்கு எக்கச்சக்க டென்ஷனாம்.
எப்படியாவது அழிந்துப் போனவற்றை ரிக்கவரி சாஃப்ட்வேர் மூலம் மீட்டெடுக்கலாம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.
டெலிட் ஆன ஃபுட்டேஜ் கிடைத்தால் நெருக்கடி இருக்காது.. இல்லையென்றால் மீண்டும் ரஜினியை வைத்து ஷூட் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிவிடுமாம். ஏற்கனவே பட்ஜெட் எகிறியதில் தயாரிப்பு தரப்பு ஒன்றும் சொல்ல முடியாமல் மெளனமாக இருக்கிறதாம். ரீஷூட் என்றால் என்ன செய்வது, அந்த பட்ஜெட்டுக்கு யார் பொறுப்பு என்று தயாரிப்பு தரப்பும் கலக்கத்தில் இருக்கிறதாம்.
’அறம்’ பட இயக்குநரின் ’கருப்பர் நகரம்’.
நயன்தாரா நடித்த ‘அறம்’ திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. கோபி நயினார் இயக்கத்தில் இப்படம் 20217-ல் வெளியானது.
படம் வரவேற்பைப் பெற்றாலும் கோபி நயினாருக்கு அடுத்தடுத்து சினிமா இயக்கும் வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.
இதற்கிடையில் கோபி நயினார் ‘கருப்பர் நகரம்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருப்பதாக தகவல்கள் வெளியானது.
பட வாய்ப்புகள் அமையாத போது கோபி நயினார் எப்படி ‘கருப்பர் நகரம்’ படத்தை இயக்கினார் என்ற கேள்விகள் கோலிவுட்டில் எழுந்தது.
விசாரித்த வகையில், ‘கருப்பர் நகரம்’தான் கோபி நயினாரின் முதல் படமாம்., இப்படத்தின் வேலைகள் 20214-லியே ஆரம்பமாகி விட்டன. ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்த போது, கதை விவாதத்தில் இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பா. ரஞ்சித்தும் இருந்தாராம்.
இப்படத்தில் ஜெய் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாகவும், தெலுங்கு நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தி வில்லனாகவும் நடித்த சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ’கருப்பர் நகரம்’ பொருளாதார சிக்கல் உட்பட பல காரணங்களால் ஒரு திரைப்படமாக முடிவடையவில்லை.
இந்த சூழலில்தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தைப் பார்த்த கோபி நயினார், தன்னுடைய ‘கருப்பர் நகரம்’ படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி ‘மெட்ராஸ்’ ஆக பா.ரஞ்சித் எடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
அந்த குற்றச்சாட்டு நாளடைவில் காணாமல் போனது.
இப்போது மீண்டும் ‘கருப்பர் நகரம்’ பற்றிய் பேச்சு கிளம்பியிருக்கிறது. ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து நடிக்காத போதும் படத்தை கோபி நயினார் முடித்துவிட்டாராம். அதாவது கோபி நயினார், முன்பு எடுத்த காட்சிகளை நுணுக்கமாக எடிட்டிங் செய்து ஒரு படமாகவே முடித்துவிட்டாராம்.