சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா – கார்த்தி ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. முதன் முதலில் படம் முழுவதும் அதிகபட்சமான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்த படத்தில்தான் என்கிறார்கள். படத்தை 2 பாகங்களாக எடுக்கும் சிவா, இதற்காக சில ஹாலிவுட் திரைப்படங்களின் ரெபரன்ஸ் எடுத்திருக்கிறார் என்பது படக்குழு காத்து வரும் ரகசியம்.
இதன் லொகேஷன் மட்டும் பல சூழலில் காட்டப்பட்டிருக்கிறது. இதற்காக கொடைக்கானல் பகுதியில் இதுவரைக்கும் டூரிஸ்ட்களின் கண்களில் படாத பகுதிகளை கண்டுபிடித்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் சிவா. பயங்கர பள்ளத்தாக்குகளும் மலை முகடுகளுமாக இருந்த இந்த இடங்களுக்கு சூர்யா ரிஸ்க் எடுத்து வந்து நடித்துக் கொடுத்ததை சிலிர்த்துப்போய் சொல்கிறார்கள். . படத்தில் ஜுனியர் ஆர்டிஸ்ட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் காஸ்ட்லியான காட்டுவாசிகளின் உடைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில உடைகள் படு வெயிட்டாக இருந்ததாம். . அதில் நாயகன் சூர்யா அணியும் உடைதான் அதிக எடை கொண்டதாம். இதை அணிந்து கொண்டு நடப்பது கஷ்டம். இதில் குதிரையேற்றம், சண்டைக் காட்சி என்று மனிதர் பேயாட்டம் ஆடியிருக்கிறார்.
ஒரு நாள் சண்டைக் காட்சியை படமாக்கிய போது குதிரையிலிருந்து சூர்யா விழுந்து விட்டார். அதில் விழுந்த அடியில் இடுப்பு எலும்பு பகுதியும் காலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் சண்டைக் கலைஞர்களை பாதுகாப்புக்காக வைத்திருந்தும் இந்த விபத்து நடந்திருக்கிறது. இதனால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார்கள்.
படத்தில் சன்னி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக சூர்யா இயக்குனர் பாலாவின் படமான வணங்கான் படத்தையே கைவிட்டு வந்திருக்கிறார். அதன் முக்கியத்துவம் இப்போது ட்ரைலரில் தெரிய வந்திருக்கிறது. இன்னும் சில படங்களின் படப்பிடிப்பையும் ஒத்தி வைத்து விட்டு சிவா சொல்லும் சில காட்சிகளில் மீண்டும் நடித்தும் கொடுத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் 10.10. 24 அன்று வெளியாக இருக்கும் கங்குவா வந்த பிறகு தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் கங்குவா இருக்கும் என்கிறார்கள். பாகுபலியெல்லாம் அதற்கு பின்னால் என்கிற பேச்சு ஸ்டுடியோ வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.