ஐந்தீவு பகுதியில் உள்ள பிரதேசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழும் தமிழர்கள், அவர்களது வாழ்க்கை, அவர்களுக்குள் நடக்கும் யுத்தம், ரத்த வெறி போன்றவற்றை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது கங்குவா.
அதில் பெருமாச்சி என்ற தீவுக்கு தலைவராக சூர்யா இருக்கிறார். அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கிறார். அவர்களுக்குள் அதிகார பேதங்கள் அத்துமீறல்கள் நடந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்குகிறார். இதுவே படம் முழுக்க விரிகிறது. அதை இன்றைய நவீன உலகத்தோடு இணைக்கும் சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு முழு படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.
கங்குவா பாத்திரத்தில் சூர்யா மிக அதிகமான சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். அவரது உடல் மொழியும் முகபாவனையும் கதாபாத்திரத்தின் தன்மையை நமக்கு காட்டுகிறது. அவருக்கு எதிராக பாபிதியோல் சூர்யாவை விட மிக பயங்கரமான தோற்றத்தில் இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் இருக்கும் சிறு சிறு தீவு மனிதர்களாக பல நடிகர்கள் ஆதிவாசி வேடத்தில் தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு படத்தில் கலை மற்றும் காஸ்டியூம் அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இது ஒன்றே படத்திற்கு போதும் என்று நினைத்து விட்டாரோ என்னவோ படத்தில் கதை என்று எதுவுமே இல்லை. திரைக்கதையும் எந்தவித திருப்பங்களும் விறுவிறுப்பும் இல்லாமல் கூட்ஸ் வண்டி போல போய்க்கொண்டே இருக்கிறது.
ஆங்காங்கே ஏதாவது நடக்குமோ சுவாரஸ்யம் இருக்குமோ என்று நாம்தான் அதீத எதிர்பார்ப்புடன் தியேட்டரில் அமர்ந்திருக்கிறோம். ஆனால் எந்தவித சலனமும் இல்லாமல் கதை நகர்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இருப்பதாக காட்டப்படும் அந்த சிறுவன் யார்? அவனுக்கு யார் தலையில் அறுவை சிகிச்சை செய்தது? எதற்காக செய்தார்கள். அவருக்கும் சூர்யாவுக்கும் என்ன மாதிரியான நிகழ்கால உறவு என்று எதையுமே சரியான சம்பவங்களுடன் திரைக்கதையை அமைக்கவில்லை சிவா.
இதனால் படம் தொடங்கி அரை மணி நேரம் என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை பதானி எதற்கு போலீஸ் செய்யும் வேலைகளை செய்கிறார்? சூர்யா யார்? யோகி பாபு யார்? – இவர்கள் எப்படி அந்த குற்றவாளிகளை பிடிக்கும் வேலையை செய்கிறார்கள் என்பதெல்லாம் எந்தவித விளக்கமும் இல்லாமல் இருக்கிறது. இதனால் படத்திற்குள் நம்மால் ஒன்ற முடியவில்லை. அதோடு படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் ஹை டெசிபிளில் உச்ச குரலில் கத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
கருணாசும் இருக்கிறார் போஸ் வெங்கட்டும் இருக்கிறார் இவர்கள் இருவரை தவிர யாரையும் அடையாளம் காண முடியவில்லை எதற்கு இந்த போர் நடக்கிறது பெண்ணுக்கா மண்ணுக்கா பொருளுக்கா என்று கேட்டால் எதற்கும் விளக்கம் இல்லை. தங்கத்திற்காக மோதுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கத்தை வாங்கி அந்த காட்டில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை காட்டவில்லை. அதனால் அந்த காரணமும் பொய்த்துப் போனது.
நூறு கைகளை வெட்டினால் 100 தங்க காசு என்று சொல்லும் இடத்தில் யாருக்காக எதற்காக வெட்ட வேண்டும் என்பதை விளக்கவே இல்லை.
இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட ஓட்டைகள் ஏகப்பட்ட கேள்விகள் ஏகப்பட்ட தவறுகள் இவை அத்தனையையும் நம்மை மறக்கடிக்க செய்வது ஒரே ஒரு விஷயம் அவர்களின் உடை அமைப்பும் பெரும் கூட்டமாக மலைப் பகுதியில் வாழும் அந்த காட்சியும் பிரம்மாண்டத்தை காட்டுகிறது இன்னும் பெண்கள் சண்டையிடுவதாக காட்டப்படும் இடமும் நம்மை கவனிக்க வைக்கிறது கைதட்ட வைக்கிறது.
தமிழில் இதுபோன்ற அதிக பிரம்மாண்டத்துடன் படங்கள் சமீப காலமாக வந்ததில்லை என்று சொல்லலாம். இதற்காக கலை இயக்குனருக்கும் உடை வடிவமைப்பாளருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் .
சூர்யா கதாபாத்திரமே நம்முள் சரியாக பதியாத சூழலில் கிளைமாக்ஸில் அவரது உடன்பிறப்பு வருகிறார் .அடுத்த பாகத்திற்கான அடித்தளத்தை அமைக்க போவதாக காட்டுகிறார்கள். காட்சி பிரம்மாண்டமாக இருந்தாலும் கதைகள் இல்லாததால் வெறும் திருவிழா கண்காட்சிக்குள் சென்று வந்த உணர்வை நமக்கு கங்குவா. ஏற்படுத்துகிறது மற்றபடி எந்த சுவாரசியமும் படத்தில் இல்லை