சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, திருவிக நகர் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பருவ மழை தொடங்கும் முன், மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தென்மேற்கு பருவமழையை ஒட்டி மாநிலத்தில் பல்வேறு துறைகள் மூலம்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை திறம்பட எதிர்கொள்ள, அரசு அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் சமீபகாலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படும் பல பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள், நீர் வழிகால்வாய்கள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் தூர்வாருதல் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பருவமழை காலத்துக்குத் தேவையான எல்லா ஆயத்த நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று, சென்னை வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பகுதியில் நீர்வளத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் 17.3 கி.மீ நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாயில் ரோபோட்டிக் எக்ஸ்வேட்டர் வாகனம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், டெமல்லஸ் சாலைப் பகுதியில் ரூ.17.56 கோடியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். இந்த மழைநீர் வடிகாலானது, முனுசாமி கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வார்டு 73, 76 மற்றும் 77-க்கு உட்பட்ட அங்காளம்மன் கோவில் தெரு, ராஜா தோட்டம் பழைய ஆடு தொட்டி சாலை, கே.எம். கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும்.
தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரியில் 10.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், புதிய தடுப்பு சுவர் அமைத்தல், தடுப்பு சுவற்றின் மேல் வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது பருவ மழை தொடங்கும் முன்னர் இரு நீர்போக்கு வழி பகுதியிலும் மழைநீர் வெளியேறும் வகையில் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
பின்னர், மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டேரி மெட்ரோ ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அனைத்து வெள்ளத் தடுப்பு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு அப்பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.