வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று முதல் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கங் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த சில நாட்களாக போக்கு காட்டி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையும் என கணிக்கப்பட்டு அதற்கு பெங்கல் புயல் என பெயரும் வைக்கப்பட்டது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மிக மெதுவாக நகர்ந்து வானிலை ஆய்வாளர்கள் பொறுமையை சோதித்தது. பின்னர், புயலாக வலுவடையாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 270 கி.மீ., தமிழ்நாட்டில் நாகைக்கு கிழக்கே 300 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 340 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் தற்போது கொண்டுள்ளது. இந்த புயலாக மாறி கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் இன்று மாலை அல்லது இரவு முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.