சினிமாவில் நட்சத்திரமாக பல வருடங்கள் இருப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் தங்களுக்கென ஒரு இடத்தை தக்க வைப்பதுதான் பிரச்சினையே. தனக்கென ஒரு இடம் கிடைத்த போது அதை தக்க வைக்க முடியாமல், இரண்டு வருடங்கள் முடங்கிப் போனது குறித்து சமந்தா ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார்.
ஆட்டோஇம்யூன் பிரச்சினையான மையோசிடிஸினால் பாதிக்கப்பட்டதால், இரண்டு ஆண்டுகள் சமந்தாவிற்கு கடுமையான சோதனைகளுடன் கழிந்திருக்கிறது. மீண்டு வருவதற்குள் சினிமாவில் ஏராளமான மாற்றங்கள். இதை எதிர்கொண்டு மீள சமந்தா ரொம்பவே போராட வேண்டியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், ஆட்டோஇம்யூன் பிரச்சினைக்கு என்ன காரணம் என்று சமந்தா இப்பொழுதுதான் உணர்ந்திருக்கிறாராம்.
’நம் உடலுக்குள் போகும் நச்சு, வெளியேறும் நச்சு கழிவு அளவு இந்த இரண்டும் சமமாக இருக்கும் போது பிரச்சினை இல்லை. ஆனால் இதில் உள்ளே செல்லும் நச்சு அதிகமாகி, வெளியேறும் நச்சு கழிவின் அளவு குறைவாக இருந்தால், ஆட்டோஇம்யூன் பிரச்சினை வந்துவிடும்.
நல்ல லைஃப் ஸ்டைல், தினமும் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி, புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் என எல்லாம் சத்துகளும் இருக்கிற டயட் வகை உணவு, உடலுக்கு ஏற்ற நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தால் போதும், நமக்கு ஒரு பிரச்சினையும் வராது. எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம். இப்படிதான் நான் நினைத்து கொண்டிருந்தேன்.
இப்படி நல்ல லைஃப் ஸ்டைல் இருந்தாலுமே, எனக்கு ஆட்டோஇம்யூன் பிரச்சினை வந்துவிட்டது. காரணம், இரண்டு விஷயங்கள்தான். ஒன்று என்னதான் படங்கள் தொடர்ந்து கிடைத்தாலும், சம்பளம் கிடைத்தாலும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்த வேலை தொடர்பான மன அழுத்தம். அடுத்து, சரியாக தூங்காமல் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓடிக்கொண்டே இருந்தது. சரியாக தூங்காமல் போனது.இதனால்தான் என்னோட வாழ்க்கை நாசமாகப் போய்விட்டது’ என்று மனம்விட்டு ஒரு ஹெல்த் பாட்காஸ்ட்டில் பேசியிருக்கிறார் சமந்தா.