சென்னையில் நேற்று இரவு தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் வில்லிவாக்கம், கணேசபுரம் சுரங்கப்பாதை உட்பட பல இடங்கள் மழை நீரீல் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இன்றை விட நாளை அதிக கனமழை இருக்கும் என்றும், இடைவிடாமல் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
பிரதீப் ஜான் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரக்கூடும் என்றும் வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. வட தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வடதமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை தீவிரம் அடைந்து உள்ளது. சிறிது சிறிதாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம் என்பதால், இன்றைக்கு போலவே நாளையும் மிக கனமழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையில் அலுவலகத்திற்கு வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புவது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
கொளத்தூரில்தான் அதிக மழை
சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நள்ளிரவு 12 மணிம இன்று நண்பகல் 12 மணி வரை பெய்துள்ள மழையின் அளவு மண்டல வாரியாக மில்லி மீட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் சேர்த்து சராசரியாக 99.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழை அளவு விவரம் பின் வருமாறு;
திருவொற்றியூர் மண்டலம்
கத்திவாக்கம்-118.2
திருவொற்றியூர்-99.0
மணலி மண்டலம்
நியூ மணலி டவுண்-128.7
மணலி-85.2
மாதவரம் மண்டலம்
மாதவரம்-97.2
புழல்-86.4
தண்டையார்பேட்டை மண்டலம்
தண்டையார் பேட்டை-107.7
ராயபுரம் மண்டலம்
சென்னை சென்ட்ரல்-80.7
பேசின் பிரிட்ஜ்-112.2
திருவிக நகர் மண்டலம்
கொளத்தூர்-158.1
பெரம்பூர்-165.3
அம்பத்தூர் மண்டலம்
அயப்பாக்கம்-150.9
அம்பத்தூர்-129.6
அண்ணாநகர் மண்டலம்
அமைந்தக்கரை-114.9
அண்ணாநகர் மேற்கு-152.4
தேனாம்பேட்டை மண்டலம்
ஐஸ் ஹவுஸ்-80.1
நுங்கம்பாக்கம்-92.1
கோடம்பாக்கம் மண்டலம்
வடபழனி-104.4
வளசரவாக்கம் மண்டலம்
மதுரவாயல்-103.2
வளசரவாக்கம்-96.3
ஆலந்தூர் மண்டலம்
ஆந்த்தூர்-20.1
முகவலிவாக்கம்-85.5
மீனம்பாக்கம்-88.2
அடையாறு மண்டலம்
அடையாறு-81.0
ராஜ அண்ணாமலை புரம்-65.7
வேளச்சேரி-122.7
பெருங்குடி மண்டலம்
மடிப்பாக்கம்-66.0
பெங்குடி-69.8
சோழிங்கநல்லூர் மண்டலம்
சோழிங்கநல்லூர்-71.4
உத்தண்டி-68.4
ஸ்பாட்டுக்கே சென்ற முதல்வர்
சென்னையில் முன்பு இல்லாத வகையில் பல்வேறு இடங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் குடியிருப்புகளுக்கு புகுந்தாலோ, வீடுகளுக்குள் சென்றாலோ உடனடியாக வெளியேற்றுவதற்கு வசதியாக ராட்சத மோட்டார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும் ஆயத்த பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகள் சீராக நடக்கிறதா என்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் களத்திற்கே சென்றார். சென்னை யானை கவுனி பகுதியில் கொட்டும் மழையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழை, வெள்ள மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்து தூய்மை பணியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களோடு அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் தேநீர் அருந்தினார். மேலும், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர் துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்று ஸ்டாலின் கூறினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்! அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேம்பாலங்களில் கார், மொட்டை மாடியில் பைக்
கனமழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கார்களை மக்கள் மேம்பாலங்களில் நிறுத்தி வைத்தனர். “காருக்கு அப்படி என்றால், பைக்குகளுக்கு வேற ஒரு ஐடியா இருக்கு” என்று சொல்கிற வகையில், டூவிலர்களை மக்கள் தங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டின் மேல் தளத்திற்கும், மொட்டை மாடிக்கும் லிப்டுகளில் கொண்டு சென்று பார்க்கிங் செய்து வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.